AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெய்வமாக மாறிய சிறுவர்கள் நட்ட கல்.. இந்த கோயில் தெரியுமா?

சிவகிரி அருகிலுள்ள தங்கமலை காளியம்மன் கோயில் சிறுவர்களால் உருவானதாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலின் தினசரி தரிசன நேரங்கள், சிறப்பு வழிபாட்டு நாட்கள், மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

தெய்வமாக மாறிய சிறுவர்கள் நட்ட கல்.. இந்த கோயில் தெரியுமா?
காளியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 May 2025 11:37 AM IST

தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு தலங்கள் உள்ளது. ஒவ்வொரு தலங்களுக்கும் வெவ்வேறு வகையான வரலாறு என்பது உள்ளது. அந்த வகையில் விருதுநகர், தென்காசி மாவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியான கடையநல்லூர் அருகேயுள்ள சிவகிரி பகுதியில் கோயில் கொண்டிருக்கும் தங்கமலை காளியம்மன் கோயில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினசரி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த கோயிலானது சுற்றுவட்டார மக்களிடையே மிகுந்த நம்பிக்கைக் கொண்ட தலமாக திகழ்கிறது. நாம் இந்த தொகுப்பில் தங்கமலை காளியம்மன் உருவான கதை, கோயிலின் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்களை காணலாம்.

கோயில் உருவான வரலாறு

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தட்டாங்குளம் கிராமத்தில் தான் இந்த தங்கமலையானது இருக்கிறது. ஒரு காலத்தில் இங்கு வசித்து வந்த மக்கள் தங்கத்தை வெட்டி தங்களது வருவாய்க்கு வைத்துக் கொண்டதாகவும் காலப்போக்கில் அந்த மலையானது கல்லாகி விட்டதாகவும் சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த மலை அடிவாரத்திற்கு ஆடு மேய்க்க சென்ற சிறுவர் சிறுமியர்கள் விளையாட்டாக ஒரு கல்லை எடுத்து கடவுளாக நினைத்து வழிபட்டு வந்தனர்.

அதன்படி உடைந்த மண்பாண்ட பகுதிகளை பொங்கலிடும் பொருட்டு பானையாக நினைத்து வைத்துள்ளார்கள். அரிசியாக அங்கிருந்த மணலையும், வாழைப்பழமாக இலவம் பஞ்சு நெற்றையும், வெற்றிலையாக அரச மர இலைகளையும், பாக்குக்காக அங்கு சிதறி கிடந்த விதைகளையும் எடுத்தனர். பத்திக்கு பதிலாக துடைப்பத்தில் பயன்படுத்தப்படும் ஈர்க்குச்சியை வைத்துக் கொண்டனர். அப்படியாக அவர்கள் விளையாட்டாக செய்த பொங்கல் நிஜ பொங்கலாக மாறியது.

சிறுவர்கள் எந்தெந்த பொருட்களுக்கு மாற்றாக விளையாட்டுப் பொருட்களை வைத்தார்களோ அதெல்லாம் மாறி சமையல் பொருளாக காட்சியளித்தது. உங்களை சிறுவர் சிறுமியர் கூட்டம் நன்கு சாப்பிட்டுவிட்டு தங்களது சட்டைகளில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிறுவர்கள் கூறிய தகவல்களை கேட்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த ஊர்காரர்கள் அதிசயித்துப் போனார்கள்.

சிறுவர்கள் நட்டு வைத்த கல்லானது விளக்கு தண்டாக மாறியிருந்தது. உடனடியாக இது குறித்து சிவகிரி ஜமீன்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வானத்தில் அசரீரி ஒலித்தது. அதன்படி பிள்ளைகள் விளையாட்டாக செய்தாலும் அவர்கள் பக்தியில் மெய் சிலிர்த்து காளியாக நான் வடிவெடுத்துள்ளேன். அருகிலிருக்கும் கூடார மலையில் கல் எடுத்து எனக்கு சிலை வடிக்க வேண்டும் என கேட்டது. இதனைத் தொடர்ந்து இந்த காளி கோயிலானது உருவானதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்தக் கோயிலில் தங்க மலை காளி எட்டு கைகளுடன் சிங்கத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சியை பார்க்கும் போது நமக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை கவனிக்கலாம். இந்தக் காளியை ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளிலும் வழிபடுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. திருமணம் குழந்தை வாக்கியம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் காளிதேவி அவர்களுக்கு தீர்வளிப்பாள் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்தவுடன் காளியம்மனுக்கு புது துணி சாற்றி பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். இந்த கோயிலில் ஆடி மாதம் முழுக்க மிகவும் விசேஷமாக திருவிழா கொண்டாடப்படும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்தில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. வாய்ப்புள்ளவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

(கோயில் பற்றி இணையத்தில் பதிவிடப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

Follow Us