தீராத நோயும் தீரும்..ஏரல் சேர்மன் அருணாச்சலம் கோயிலின் சிறப்புகள்!
தூத்துக்குடி அருகே ஏரலில் அமைந்த சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலுக்கு திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த கோயில் காலை 6 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தென் மாவட்டங்கள் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த இடங்களாகும். இங்கு பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் காவல் தெய்வங்களை அதிக அளவில் வணங்கும் வழிபாடு செய்யும் முறை உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கும் ஏரலில் அமைந்துள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இந்த கோயில் ஆனது காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4:00 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக இந்த கோயிலுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோயில் உருவான வரலாறு
திருச்செந்தூர் அருகே மேல புதுக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு ராமசாமி- சிவனந்த அம்மையாருக்கு 1880 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி சேர்மன் அருணாச்சல சுவாமிகள் மகனாக அவதரித்தார். பல கலைகளை சொல்லிக் கொடுக்க பெற்றோர் ஏற்பாடு செய்த நிலையில் இவரும் அனைத்து கலைகளையும் கற்றறிந்தார். பின்னர் ஏரல் என்ற ஊருக்கு வந்து மௌன விரதம் இருந்து பக்தி யோகத்தை பின்பற்ற தொடங்கினார். தன்னைக் காண வந்த பொது மக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறி அவர்களை பிரச்சனை தீர்த்து வைப்பதில் பெரும் பங்கு கொண்டிருந்தார்.
அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவரது நீதியையும் நேர்மையையும் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாராட்டி அவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி வேண்டிக் கொண்டார்கள். அதனை ஏற்று 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சேர்மனாக பதவியேற்ற அருணாச்சல சுவாமிகள் 1908 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை பணியாற்றினார். அவரை சேர்மன் அருணாச்சலம் என்று அனைவரும் அழைக்க தொடங்கினர்.
சமாதி இருந்த இடம் கோயிலானது
தனது 28 வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாத அருணாச்சல சுவாமிகள் ஒருநாள் தனது சகோதரர் கருத்த பாண்டியனை அழைத்து ஒரு விஷயம் சொன்னார். அதன்படி நான் 1908 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணியளவில் இறைவனடி சேர்வேன். எனது உடலை ஏரலுக்கு தென்மேற்கில் இருக்கும் தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக இருக்கும் ஆலமரம் அடியில் சமாதி வைக்க வேண்டும். அதில் மலர்களும் மண்ணும் போட்டு மூட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்போது மேலே கருடன் வட்டமிடும் எனக் கூறியிருந்தார். சொன்னபடியே சொன்ன நாளில் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். அன்றைய தினம் அவர் சொன்னதுபோலவே நடந்தது. அவரது சமாதி இருந்த இடம் தற்போது கோயிலாக வணங்கப்பட்டு வருகிறது, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார்.
இந்த கோயிலில் பிரசாதமாக திருமணம் தண்ணீரும் தருகிறார்கள் மேலும் ஆடி அமாவாசை இந்த கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அன்றைய நாளில் வேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்தக் கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். தான் மரணிக்கும் செய்தி அறிந்த சேர்மன் அருணாச்சலம் என்னை நாடிவரும் அனைவருக்கும் வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை கடைசி காலம் வரை காத்து நிற்பேன் என உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு வழிபாடு ஆனது நடைபெறும். அன்றைய நாளில் நான்கு கால பூஜை நடைபெற்று பூஜைக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சேர்மன் சுவாமிக்கு கரை இல்லாத வேட்டி, தலைப்பாகை, துண்டு, மாலைகள் வாங்கி செலுத்தி வழிபடுகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)