Nava Kailasam Temples: சிவலிங்கத்தில் நாகர்.. இந்த ராகு ஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களில் ஒன்றான கோத பரமேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு, சிறப்புகள் பற்றி காணலாம். உரோமச முனிவரின் சிவலிங்க பிரதிஷ்டை, அரசனின் சாபம் மற்றும் பசுக்கள் பால் சொறிந்த அதிசயம் போன்ற நிகழ்வுகள் இந்த கோயில் உருவாக காரணமாகும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான வழிபாட்டு தெய்வங்கள் உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆற்றங்கரையில் நவகைலாய கோயில்கள் உள்ளது. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 9 கிரகங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டதாக நம்பப்படுகிறது. உரோமச முனிவர் பல்வேறு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினார். இது தொடர்பாக தனது குருவான அகத்திய முனிவரிடம் ஆலோசனை கேட்டார். அவரோ சிவபெருமானுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் வீசி அது எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடு என கூறினார். அதன்படி பாபநாசம் பாபநாதா சுவாமி கோயில், சேரன்மகாதேவி அம்ம நாதர் திருக்கோயில், கூடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் ஆகிய இடங்களில் அந்த மலர்கள் கரை ஒதுங்கியது.
நவகைலாய தலங்கள்
இதில் பாபநாசம் சூரிய பகவானுக்குரிய தலமாகவும், சேரன்மகாதேவி சந்திர பகவானுக்கு உரிய தலமாகவும், கோடகநல்லூர் செவ்வாய் பகவானுக்கு உரிய தலமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் ராகு பகவானுக்குரிய தலமாக திகழும் திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூர் அருகே இருக்கும் கோத பரமேஸ்வரர் சமேத சிவகாமி அம்மன் திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயில் திருநெல்வேலி டவுணில் இருந்து சரியாக 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் உருவான வரலாறு
முன்பொரு காலத்தில் குன்னத்தூர் பகுதியை ஆண்டு வந்த அரசன் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அதிசயம் மரம் ஒன்று இருந்தது. அதில் ஆண்டுக்கு ஒரு முறை பூ பூத்து ஒரே ஒரு பழம் மட்டும் பழுக்கும். அத்தை இங்கே சிறப்பு வாய்ந்த பழத்தை அரசன் மட்டுமே உண்டு வந்தான். இப்படியான நிலையில் ஒருமுறை அந்த மரத்தின் பக்கமாக ஒரு பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்றபோது பழம் குடத்தினுள் விழுந்துவிட்டது. இதை அறியாத அந்தப் பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். இதற்கிடையில் மரத்தில் பழம் இல்லாததைக் கண்ட அரசன் கோபமடைந்து காவலர்களை அனைத்து வீடுகளுக்கும் சென்று சோதனை செய்ய உத்தரவிட்டான்.
இந்த சமயத்தில் வீட்டிற்கு சென்ற பெண் தன்னுடைய குடத்தில் பழம் இருப்பதைக் கண்டு அதனை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள். காவலர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் திருடிய பலத்தை நம்மிடம் கொடுத்து நல்ல பெயர் எடுக்கிறாள் என நினைத்துக் கொண்ட அரசன் அப்பெண்ணை கழுவேற்ற உத்தரவிட்டான். அந்தப் பெண் மரணிக்கும் தருவாயில் நீதி இல்லாத இந்த ஊரில் பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள்.
அதன்படி காலப்போக்கில் இந்த ஊரில் ஆண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த ஊரில் இருந்த பெண்களையும் யாரும் திருமணம் செய்யவும் முன் வரவில்லை. இதனை எடுத்து பெண்கள் அனைவரும் ஈசனை நினைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அப்போது அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் சாப நிவர்த்தி கொடுத்து அருள விரும்பினார். அதன்படி உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை வெளிப்படுத்த எண்ணினார்.
பாம்புகள் சூழ்ந்திருந்த மண் புற்று ஒன்றுக்கு மேல் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் தானாக பாலை சொரிந்தன. அதனை கண்ட மேய்ப்பர்கள் உடனடியாக பாண்டிய மன்னரிடம் இது தொடர்பாக தெரிவித்தனர். மன்னரும் வந்து அதிசயத்தை நேரில் கண்டு மகிழ்ந்தார். இந்த சிவபெருமானுக்கு பெரிய கோயில் ஒன்றை எழுப்ப விரும்பினார். உடனடியாக அந்த பகுதியை சுத்தம் செய்து முறையாக கோயில் எழுப்பப்பட்டது. இறைவன் அருளால் அந்த ஊரில் இருந்தால் சாபமும் நீங்கியது. பசுக்கள் இந்த சிவலிங்கத்தை வெளிப்படுத்தியதால் இவர் கோத பரமேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலில் கைலாசநாதர் எனப்படும் கோத பரமேஸ்வரரும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சிவலிங்கத்தில் நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்த நாகர் ராகு பகவானாக அறியப்படுகிறார். அதே சமயம் சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கி தனிக் கருவறையில் ஒரு கையில் மலர் ஏந்தியும், மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும்.
கோயில் சுற்று வட்டார பிரகாரத்தில் நந்தி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நயினார், கன்னிமூல கணபதி ஆகியோர் சன்னதி உள்ளது. மேலும் சண்டிகேஸ்வரர் பைரவர் சன்னதியும் இருக்கிறது. இந்த கோயிலில் முன் மண்டபம் ,அர்த்தமண்டபம், நடு மண்டபம் ஆகிய மூன்று மண்டபங்கள் உள்ளது. இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழ்நாட்டில் இங்கும் மட்டும்தான் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயமாகும். குழந்தை வரம், கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் இந்த கோயிலில் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் மகா சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம், திருக்கார்த்திகை ஆகியவை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)