நவகைலாய ஸ்பெஷல்.. சந்திர பகவானுக்குரிய கோயிலின் சிறப்புகள்!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள அம்மைநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவகைலாய கோயில்களில் ஒன்றாக உள்ளது. உரோமச முனிவரின் பிரதிஷ்டையால் உருவான இக்கோயிலில் அம்மைநாதர் மற்றும் ஆவுடை நாயகி அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் வரலாறு, சிறப்புகள், வழிபாட்டு முறைகள் பற்றிக் காணலாம்.

பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களும் சைவ, வைணவ அடிப்படையில் பல்வேறு தொகுப்புகளாக பிரித்திருப்பார்கள். உதாரணமாக அறுபடை வீடுகள், 108 திவ்ய தேசங்கள், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள், நவ திருப்பதி என குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வகையில் அமையப் பெற்றது தான் நவகைலாயம். திருநெல்வேலி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் 9 வகையான கோயில்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2வது கோயிலாக இருக்கும் சேரன்மகாதேவியில் வீற்றிருக்கும் அம்மைநாதர் – ஆவுடை நாயகி திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த கோயிலானது திருநெல்வேலியில் இருந்து சரியாக மேற்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மைநாதராக சிவபெருமானும், ஆவுடை நாயகியாக பார்வதியும் அருள் பாலிக்கின்றனர். நவகைலாயங்களில் சந்திரனுக்குரிய தலமாக பார்க்கப்படும் இந்தக் கோயில் தினமும் காலை 7 மணி முதல் 10:00 மணி வரையும் மாலையில் 5:00 மணி முதல் 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
உரோமச முனிவர் சிவபெருமானின் தரிசனம் வேண்டி தனது குருவான அகத்திய முனிவரிடம் ஆலோசனை கேட்டார். அவர் சிவபெருமானுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் வீசிவிடு, அது எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு என தெரிவித்தார். அதன்படி சேரன்மகாதேவியில் ஒதுங்கிய தாமரை மலர் இருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிற்காலத்தில் அந்த லிங்கமானது ஒரு அரச மரத்தின் கீழ் இருந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த சிவபக்தைகளான சகோதரிகள் இருவர் தினமும் அதனை வழிபட்ட பிறகு தங்களது வேலையை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நாளாக அவர்கள் மனதிற்குள் யாராலும் கவனிக்கப்படாமல் மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்திற்கு கோயில் எழுப்பப்படாமல் இருப்பது குறித்து ஆதங்கம் இருந்து வந்தது. ஏழைகளான அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்றாலும் சிறுக சிறுக சேமித்து கோயில் கட்ட முடிவு செய்தனர்.
அவர்களின் பக்தியில் நெகிழ்ந்து போன சிவபெருமான் அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்து உணவு பரிமாறிய சகோதரிகளிடம் வீட்டில் விளக்கு எரியவில்லை என சுட்டிக்காட்டி விளக்கு எரியாத வீடு மங்களம் இல்லாததற்கு சமம். ஆகவே இந்த வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று அடியார் எழுந்து விட்டார். பதறிப் போன சகோதரிகள் அவசரத்தில் தேடிய போது விளக்கு இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை.
இதனால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய் விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய சுய ரூபத்தை காட்டினார். அடியாராக வந்தது சிவபெருமான் என எண்ணிய சகோதரிகள் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பின்பு அவர்களின் இல்லத்தில் செல்வ வளம் பெருகிய நிலையில் அதை கொண்டு இந்த கோயில் எழுப்பியதாக வரலாறு உள்ளது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் நந்தனார் தரிசித்ததற்கான சான்றுகள் உள்ளது. அதன்படி அவரது சிற்பமானது கொடி மரத்திற்கு கீழே இருக்கும் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொடி மரம் அருகில் நின்று இக்கோயிலில் அமைந்திருக்கும் சற்று விலகி இருக்கும் நந்தியை வழியாக சிவபெருமானை தரிசனம் செய்யலாம் என்பது விசேஷமாகும்.
தங்களின் வியாபாரம் செழிக்க பக்தர்கள் அரிசி தானம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் திருமண தோஷத்தால் அவதிப்படுபவர்கள் மாதுளம் பழத்தில் சாறு பிழிந்து அதனை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மேலும் அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி அதன் மத்தியில் தேங்காயை உடைத்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த கோயிலின் ஒரு தூணில் அந்த இரு சகோதரிகள் உருவமும், மற்றொரு தூணில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த உரோமோசர் உருவத்தையும் காணலாம்.
இந்தக் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர், நாய் வாகனம் இல்லாத பைரவர் ஆகியவை உள்ளது மேலும் நவகிரக சன்னதி இங்கு கிடையாது. ஆனால் சந்திர ஸ்தலமான இக்கோயிலில் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் சந்திரன் காட்சி கொடுக்கிறார் மேலும் மகாவிஷ்ணு, விசாலாட்சி, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, நவக்கன்னிகள், சனீஸ்வரர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
திருநெல்வேலி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவிக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் சேரன்மகாதேவி ரயில் நிலையம் சென்று கோயிலுக்கு செல்லலாம். வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.