Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shasti Viratham: சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒவ்வொரு மாத வளர்பிறை மற்றும் தேய்பிறையில் இந்த திதி வந்தாலும் ஐப்பசி மாத சஷ்டி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் விரதம் இருந்தால் செல்வம், மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

Shasti Viratham: சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Jun 2025 18:08 PM

பஞ்சாங்கத்தை பொருத்தவரை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 14 வகையான திதிகள் உள்ளது. மாதம் 30 நாட்கள் என்ற கணக்கில் பார்க்கும்போது மீதமுள்ள இரண்டு நாட்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் இத்தகைய திதிகளில் ஆறாவதாக வரும் சஷ்டி திதி தமிழ் கடவுளாக வழிபடப்படும் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். அவனின் முழு அருளை பெறுவதற்கு சஷ்டி திருநாளில் விரதம் இருந்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இரு சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டியை கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காத்த நிகழ்வே கந்த சஷ்டியாக திருச்செந்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இப்படியான நிலையில் மாதம் தோறும் முருகனுக்கு சஷ்டி விரதம் எப்படி இருக்கலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

சஷ்டி விரதம் பலன்கள்

இந்த விரதத்தை நாம் மேற்கொண்டால் முருகன் நம்மை தீமையிலிருந்து காத்து வாழ்க்கையில் நன்மை, மகிழ்ச்சி, செல்வ வளம் உள்ளிட்ட வேண்டுபவற்றை அளிப்பார் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இத்தகைய சஷ்டி விரதத்தை மேற்கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக விரதம் இருக்கும் வழிமுறைகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக சஷ்டியில் இருந்தால் அகப்பையில் கிடைக்கும் என்பது பழமொழியாக உள்ளது. அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பை எனப்படும் கர்ப்பப்பையில் குழந்தை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அப்படியாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஐப்பசி மாதத்தில் வரும் மகா சஷ்டியின் போது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம். அதேபோல் தொழில் வளர்ச்சி, உடல் நல பாதிப்பு, வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் உள்ளிட்டவை நீங்கவும் இந்த நாளில் நீங்கள் விரதம் இருக்கலாம்.

சஷ்டி விரதம் இருக்கும் முறைகள்

விரதம் இருப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் முடிந்தவரை எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும். ஒருவேளை உடல் நல பாதிப்பு இருப்பவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் உள்ளிட்டவர்கள் பால் அல்லது பழத்தை உண்டு விரதத்தை தொடரலாம். இத்தகைய சஷ்டி நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராடி விட்டு முருகனுக்குரிய வெள்ளை நிற பூக்களை சூட்டி அவனுக்குரிய பக்தி பாடல்கள் பாடி விரதத்தை தொடங்கலாம். காலை வழிபாட்டின் போது பால், பழம் மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவை மட்டுமே படைத்து வழிபட வேண்டும்.

அந்த காய்ச்சிய பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து படைக்கலாம். பின்னர் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். முடியாதவர்கள் முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு விடலாம்.

மாலை வரை விரதத்தை தொடர்ந்த பின்னர் விளக்கேற்றும் வேளையில் மீண்டும் பால், பழம் படைத்து ஒரு மனைப்பலகை எடுத்து அதில் ஷட்கோண கோலமிட்டு ஆறு அகல் விளக்கில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது முருகனுக்கு உரிய மந்திரம், பக்தி பாடல்கள் பாடி தீப தூபம் காட்டி வழிபடலாம்.  பின்னர் சுவாமிக்கு படைத்த பாலை குடித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த விளக்கமும் இல்லை)