பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி மலர்ந்தது.. முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி.. அரசியலில் புதிய சகாப்தம்!!
Bihar Chief Minister: நிதீஷ் குமாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாட்னாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சாம்ராட் சவுத்ரி ஒருமனதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் 89 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
பீகார் மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. நேற்று வரை துணை முதலமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, இன்று (ஏப்ரல் 15, 2026) பீகாரின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். பாட்னாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சாம்ராட் சவுத்ரிக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
பாஜகவின் முதல் முதலமைச்சர்:
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வந்தாலும், பீகாரில் மட்டும் இதுவரை அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததில்லை. இன்று சாம்ராட் சவுத்ரி பதவியேற்றதன் மூலம், பீகாரின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கும் முதல் பாஜக தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதோடு, பீகாரில் பாஜக தலைமையிலான ஆட்சி முதல்முறையாக மலர்கிறது.
நிதீஷ் குமார் ராஜினாமா:
கடந்த இரண்டு தசாப்தங்களாக பீகார் அரசியலின் மையப்புள்ளியாக விளங்கிய நிதீஷ் குமார், நேற்று (ஏப்ரல் 14) தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மாநில அமைச்சரவையைக் கலைக்கப் பரிந்துரைத்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனிடம் வழங்கினார். மாநில அரசியலில் இருந்து விலகி, அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தனது பயணத்தைத் தொடர்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிதீஷ் குமார், “இனி புதிய அரசு பீகாரின் பணிகளைக் கவனிக்கும். புதிய அரசுக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சாம்ராட் சவுத்ரியின் வளர்ச்சி:
நிதீஷ் குமாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாட்னாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சாம்ராட் சவுத்ரி ஒருமனதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் 89 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
சாம்ராட் சவுத்ரியின் பெயர், வெளியேறும் முதலமைச்சர் நிதீஷ் குமாராலேயே முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒருமித்த ஆதரவுடன் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
யார் இந்த சாம்ராட் சவுத்ரி?
1968-ல் பிறந்த சாம்ராட் சவுத்ரி, செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சகுனி சவுத்ரி ஆறு முறை எம்எல்ஏவாக இருந்தவர். 1990-களில் ஆர்.ஜே.டி (RJD) கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சாம்ராட், பின்னர் ஜே.டி.யு (JD-U) கட்சியில் இணைந்தார். 2017ல் பாஜகவில் சேர்ந்த அவர், மிக விரைவாக அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் உயர்ந்தார்.
இதையும் படிக்க: காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
பீகாரில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர். இவரை முன்னிறுத்துவதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) ஆதரவை வலுப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. சாம்ராட் சவுத்ரி கடந்த 2022-ஆம் ஆண்டு, நிதீஷ் குமாரை அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை தனது தலையில் ‘முரேத்தா’ (தலைப்பாகை) அணிவேன் எனச் சபதம் ஏற்றிருந்தார். பின்னர் 2024-ல் நிதீஷ் குமார் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தபோது, அந்தத் தலைப்பாகையை அயோத்தி ராமர் கோவிலில் சமர்ப்பித்தார். தற்போது நிதீஷ் குமாருக்குப் பதிலாக அவரே முதலமைச்சராகப் பதவியேற்பது அவரது அரசியல் வாழ்வில் உச்சமாகக் கருதப்படுகிறது.