வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய பெண்.. அவற்றை அணிந்து ரீல்ஸ் பதிவிட்டதால் வசமாக சிக்கினார்!
House help Woman Stole Jewelley From The House | உத்தரகாண்டில் வேலை செய்த வீட்டில் இருந்து நகைகளை திருடிய பணிப்பெண், தான் திருடவில்லை என நாடகமாடியுள்ளார். இந்த நிலையில், அவற்றை அணிந்து ரீல்ஸ் பதிவிட்ட நிலையில், வசமாக சிக்கியுள்ளார்.
டேராடூன், ஜூலை 04 : உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம், டேராடூன் (Dehradun) பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவர், அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடிய நிலையில், அவற்றை அணிந்துக்கொண்டு ரீல்ஸ் பதிவிட்டதால் வசமாக சிக்கியுள்ளார். நகையின் உரிமையாளர் அது குறித்து கேட்டபோது தனக்கு எதுவுமே தெரியாது என அந்த பணிப்பெண் நாடகமாடிய நிலையில், தற்போது ஒரு ஆண்டுக்கு பிறகு கையும், களவுமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வேலை செய்த வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய பெண்
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ஐடி பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் நிதிஷா. இவர் வீட்டில் இருந்து ஒரு ஆண்டுக்கு முன்பு தங்க செயின், இரண்டு வைர மோதிரங்கள் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்த நிதிஷா, தனது வீட்டின் பணிப்பெண் மீது சந்தேகமடைந்து அது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க : சந்தூர் இசைத்து அசத்திய ஜப்பான் பிரதமர்.. இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ




ஆனால், அந்த பெண்ணோ நகைகளை தான் பார்க்கவில்லை என்றும், தானே காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் நாடகமாடியுள்ளார். இதனால், அந்த பெண்ணை நம்பிய நிதிஷா காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அப்போது தனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரீல்ஸ் மூலம் ஒரு ஆண்டுக்கு பிறகு வெளிவந்த உண்மை
நிதிஷா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அது குறித்து ஒரு ஆண்டாக எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தற்செயலாக நிதிஷா இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தனது பணிப்பெண் பதிவிட்டிருந்த ரீல்ஸ் ஒன்றில் காணாமல் போன தனது தங்க செயினை அணிந்திருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.
இதையும் படிங்க : “30 நாள் சிறையில் இருந்தால் பதவி காலி!”.. வருகிறது முதல்வர், பிரதமர்களை நீக்கும் அதிரடி சட்டத்திருத்தம்!
பின்னர் பணிப்பெண்ணின் வாட்ஸ்அப் டிபியை சோதனை செய்த அவர், அது காணாமல் போன தனது தங்க செயின் என்பதை உறுதி செய்துள்ளார். பின்னர் ஆதாரங்களுடன் அவர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அந்த பணிப்பெண்ணை அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகளை மீட்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.