“30 நாள் சிறையில் இருந்தால் பதவி காலி!”.. வருகிறது முதல்வர், பிரதமர்களை நீக்கும் அதிரடி சட்டத்திருத்தம்!!
பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது இறுதி அறிக்கையை வரும் ஜூலை 17-ஆம் தேதி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா மீதான அறிக்கை தாக்கல் செய்யப்படலாம்.
கைது செய்யப்படும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வழிவகுக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவை, வரும் ஜூலை மாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவின் மிக முக்கியப் பிரிவைத் தக்க வைத்துக் கொள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: இ20 பெட்ரோல் குறித்து மத்திய அரசு கொடுத்த புதிய விளக்கம்.. கவனிக்க வேண்டியவை என்ன தெரியுமா?
மசோதாவின் பின்னணியும் புதிய விதிகளும்:
தற்போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒரு அமைச்சர் அல்லது முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதன் மூலமோ, பிரதமர் அல்லது முதலமைச்சரால் நீக்கப்படுவதன் மூலமோ அல்லது நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுத் தகுதிநீக்கம் செய்யப்படுவதன் மூலமோ மட்டுமே பதவியை இழக்க முடியும். ஆனால், இந்த புதிய மசோதா “நீதிமன்றத் தீர்ப்பு” வரை காத்திருக்காமல், “நீண்ட கால சிறைக்காவலை” அடிப்படையாகக் கொண்டு பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கிறது. அதன்படி, பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்களின் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்.
31வது நாளில் பதவி காலி:
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவரும், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரை மாநில ஆளுநர்களும் இந்த பதவி நீக்கத்தை முறைப்படுத்துவார்கள். ஒருவேளை குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யத் தவறினால், எந்தவொரு பரிந்துரையுமின்றி 31-வது நாளில் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் வகையில் இந்த மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு:
அதேவேளையில், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்குத் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்தியப் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி வெறும் கைது நடவடிக்கையின் மூலமாகவே எளிதாகக் கவிழ்க்க இந்த மசோதா வழிவகுக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற இயற்கை நீதிக்கும் எதிரானது என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க: எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் எப்போது தாக்கல்?
பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது இறுதி அறிக்கையை வரும் ஜூலை 17-ஆம் தேதி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா மீதான அறிக்கை தாக்கல் செய்யப்படலாம். இது ஒரு அரசமைப்புச் சட்டத்திருத்தம் என்பதால், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் மட்டுமே இது சட்டமாக மாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.