AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தன்னிச்சையாக பயன்படுத்த வேண்டாம்: CDSCO எச்சரிக்கை

மருத்துவர்கள், நோயாளியின் வயது, உடல்நிலை, இணை நோய்கள் மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தும் மருந்துகளை கருத்தில் கொண்டு NSAIDs மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். NSAIDs மருந்துகளை குறைந்த பயனுள்ள அளவில், தேவையான குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தன்னிச்சையாக பயன்படுத்த வேண்டாம்: CDSCO எச்சரிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2026 21:34 PM IST

செப்டம்பர் 23, 2026: வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை தன்னிச்சையாகவும், நீண்ட காலத்திற்கும் பயன்படுத்துவதால் நாள்பட்ட சிறுநீரக நோய், தவிர்க்கக்கூடிய மருந்து பக்கவிளைவுகள் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) எச்சரித்துள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்:

செப்டம்பர் 21-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், NSAIDs மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரின் பரிந்துரையின்றி சில்லறை விற்பனை செய்யக்கூடாது:

1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகளின்படி, பல்வேறு NSAIDs மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் Schedule H மற்றும் H1 உள்ளிட்ட பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான NSAIDs, Schedule H பிரிவில் இருப்பதால், மருத்துவரின் பரிந்துரையின்றி சில்லறை விற்பனை செய்யக்கூடாது. அதேபோல், பெரும்பாலான ஆன்டிபயாடிக் மருந்துகள் Schedule H1 பிரிவில் உள்ளதால், மருத்துவ ஆலோசனைக்கு மாறாக அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; 3 மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே

பொதுமக்கள் வலி நிவாரணிகள் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாகவும், மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட காலத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. பெரும்பாலான சிக்கலற்ற வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை என்பதால், இதுபோன்ற நோய்களுக்கு அவற்றை சுயமாக பயன்படுத்தக் கூடாது என்றும் CDSCO தெரிவித்துள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்:

மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் மருந்துகளை அவர் அறிவுறுத்தியபடி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள மருந்துகளை பின்னர் பயன்படுத்துவதோ, பிறருடன் பகிர்ந்து கொள்வதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் அல்லது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் கொண்டவர்கள், NSAIDs பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் தங்களது உடல்நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். வலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தாலோ, மீண்டும் ஏற்பட்டாலோ தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மேலும் படிக்க: சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..

மருத்துவர்கள், நோயாளியின் வயது, உடல்நிலை, இணை நோய்கள் மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தும் மருந்துகளை கருத்தில் கொண்டு NSAIDs மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். NSAIDs மருந்துகளை குறைந்த பயனுள்ள அளவில், தேவையான குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற ஆன்டிபயாடிக் சிகிச்சை, தவறான மருந்துத் தேர்வு, அளவு மற்றும் நீண்டகால பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் CDSCO தெரிவித்துள்ளது.

Follow Us