இந்தியா கூட்டணிக் கூட்டத்தை மீண்டும் புறக்கணிக்கும் திமுக – வெளியான தகவல்
DMK Skips INDIA Meet : தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது குறித்து டெல்லியில் செப்டம்பர் 30, 2026 இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக பங்கேற்காது என அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது குறித்தும் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காகவும் டெல்லியில் செப்டம்பர் 30, 2026 இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஜேஎம்எம், என்சிபி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்தியா கூட்டணிக் கூட்டத்தை மீண்டும் புறக்கணிக்கும் திமுக
இதற்கிடையில் இந்தியா கூட்டணி சார்பில் செப்டம்பர் 30,2026 இன்று நடைபெறும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியில் இருந்து விலகி, விஜய்யின் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது. இதனையடுத்து திமுக இனி இந்தியா கூட்டணியின் இல்லை என்று திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உள்ளாட்சிப் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பா? நகராட்சியா? சட்டம் என்ன சொல்கிறது?




இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழகத்தில் வெறும் 2 அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரஸ் தவெகவைத் தேர்ந்தெடுத்தது. தவெகவுடனான உறவு தொடரும் என்றும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் இப்போது எங்கள் கூட்டணியில் இல்லை. பிறகு எப்படி நாங்கள் அவர்கள் கூட்டும் கூட்டத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்தக் கூட்டத்தைத் தவிர்ப்பதற்குக் காங்கிரஸ்தான் காரணம் என்றும் இளங்கோவன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸுடன் உள்ள கருத்து வேறுபாடுகளால் பல கட்சிகள் இந்தக் கூட்டத்துக்குச் செல்லத் தயக்கம் காட்டுகிறது. அதேநேரம் பாஜகவை எதிர்ப்பதில் அனைத்துக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல கட்சிகள் காங்கிரஸுடன் செல்ல விரும்பவில்லை. ஆனால் கொள்கை அளவில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். பாஜகவை எதிர்ப்பார்கள். பிரச்னைகள் என்ன என்பது ஒவ்வொரு கட்சிக்கும் தெரியும். எனவே இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டத்தில் கலந்துகொள்வது வெறும் சம்பிரதாயம்தான் என்றார்.
இதையும் படிக்க : அர்ப்பணிப்பு மறக்க முடியாதது – அசோக் சிங்காலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் சிறப்புக் கட்டுரை
இதற்கிடையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோவில் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு நடைபெறுவதால், அகிலேஷ் யாதவ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தொடர்பான பணிகள் காரணமாக அகிலேஷ் வர இயலவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.