மைக்ரோவேவில் சூடாக்கப்படும் உணவால் புற்றுநோய் ஏற்படுமா? உண்மை என்ன?
Microwave Cooking and Cancer Risk : மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்துவது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தி மைக்ரோவேவ்கள் உணவை வெப்பப்படுத்துகின்றன. இதனால் புற்றுநோய் அபாயம் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில் பிரபல மருத்துவர் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் வயதானவர்களிடம் பெரும்பாலும் காணப்பட்ட இந்த நோய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை இதற்குக் காரணமாக கூறப்படுகின்றன. குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட இனிப்புகள் மற்றும் துரித உணவுகள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் குறித்த முரண்கள் மக்களிடையே நிலவுகிறது.
மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மருத்துவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பதாலோ, அல்லது உணவை சூடுபடுத்துவதாலோ புற்றுநோய் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
இதையும் படிக்க : Health Tips: புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகமாக தூங்குவது ஏன்? இது பிரச்சனையை தருமா?
மைக்ரோவேவில் உணவை சமைப்பதால் புற்றுநோய் ஏற்படுமா?
இந்த நிலையில், பிரபல புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயேஷ் சர்மாவின் தகவலின்படி, புற்றுநோய் தொடர்பான பெரும்பாலான அச்சங்களும் தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார். உதாரணமாக, மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்துவது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தி மைக்ரோவேவ்கள் உணவை வெப்பப்படுத்துகின்றன. இந்த கதிர்வீச்சு அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு ஆகும். இது மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்களை அகற்றும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதனால் இது டிஎன்ஏவின் கட்டமைப்பை நேரடியாக சேதப்படுத்தாது.
இதற்கு நேர்மாறாக, எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற அயனியாக்கம் செய்யும் கதிர்வீச்சு டிஎன்ஏவில் மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மைக்ரோவேவ் அலைகளுக்கு அந்த திறன் இல்லை. எனவே முறையாகப் பயன்படுத்தும்போது மைக்ரோவேவில் உணவை சூடாக்குவது பொதுவாக பாதுகாப்பானது என்கிறார்.
இதையும் படிக்க : இதை கவனிங்க.. குழந்தைகளை தாக்கும் கால்சியம் பிரச்னை.. கண்டறிவது எப்படி?
மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- முடிந்தவரை மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- வெப்பம் காரணமாக சில பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து ரசாயனங்களை உணவில் கசியச் செய்யலாம்.
- கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
- மைக்ரோவேவ் கதவு சரியாக மூடப்படுவதையும் சேதமடையாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- சமமான வெப்பத்தை உறுதிசெய்ய உணவை இடையில் கிளறிவிடுவது அவசியம்
சுருக்கமாக, மைக்ரோவேவ் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்ற பயம் அறிவியல் ஆதாரங்கள் இல்லாத நம்பிக்கை. ஆனால் சரியான பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சரியான முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாக்க முடியும்.



