AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சுயமரியாதை திருமணம் செய்த அனிருத் – காவியா மாறன்.. உறுதி செய்த முன்னாள் அமைச்சர்..

Anirudh Ravichander Kavya Maran marriage: கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் சுயமரியாதைத் திருமண முறைப்படி நடைபெற்றதாக திமுக தலைவர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். திருமணத்தில் நடைபெற்ற சடங்குகள் குறித்த முழு விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சுயமரியாதை திருமணம் செய்த அனிருத் – காவியா மாறன்.. உறுதி செய்த முன்னாள் அமைச்சர்..
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Nov 2026 08:43 AM IST

நவம்பர், 13: தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தருக்கும், ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்கும் இடையே கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அவர்கள் பின்பற்றிய திருமணச் சடங்குகள் குறித்துப் பொதுமக்கள் இடையேயும் இணையவாசிகள் மத்தியிலும் பெரும் விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக, காவ்யா மாறனின் கழுத்தில் அனிருத் சங்கிலி அணிவிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இவர்களது திருமணம் சுயமரியாதைத் திருமண முறைப்படி நடைபெற்றதா என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டன.

இதையும் படிக்க: 11: 11… என் வாழ்வில் ஒருமுறை… காவியா மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அனிருத்!

சுயமரியாதை திருமணம் குறித்து டி.ஆர்.பி.ராஜா விளக்கம்:

சமூக வலைதளங்களில் எழுந்த இந்தச் சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். அதில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் சுயமரியாதைத் திருமண முறைப்படிதான் நடைபெற்றது என்பதை அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார். மணமக்கள் இருவரும் மாலைகளையும் சங்கிலிகளையும் மாற்றிக்கொண்டு, தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆசியுடன் தங்களது வாழ்க்கையின் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் நடைபெற்ற முக்கியச் சடங்குகள்:

திருமண நிகழ்வின் போது அரங்கேறிய சுவாரஸ்யமான தருணங்கள் குறித்துத் தனது பதிவில் விவரித்துள்ள டி.ஆர்.பி. ராஜா, “ஆம்… காவ்யாவும் அனிருத்தும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்… ‘#தலைவர்’ (Thalaivar) காவ்யாவிடம் ஒரு சங்கிலியை எடுத்துக் கொடுத்தார், ‘#சூப்பர்ஸ்டார்’ (Superstar) அனிருத்திடம் ஒரு சங்கிலியை எடுத்துக் கொடுத்தார்… மணமகனும் மணமகளும் அந்தச் சங்கிலிகளைப் பரஸ்பரம் மாற்றிக்கொண்டனர், இரு இதயங்களின் இந்த சங்கமம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். முக்கியப் பிரமுகர்களின் முன்னிலையில் எவ்வித ஆடம்பர மதச் சடங்குகளுமின்றி மிக எளிமையாகவும் அன்போடும் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.

இதையும் படிக்க: Anirudh Wedding: ஓ பெண்ணே பெண்ணே… அனிருத் – காவியா மாறனின் கிரீஸ் திருமண போட்டோ கிளிக்ஸ்!

சுயமரியாதைத் திருமணத்தின் வரலாறும் சட்ட அங்கீகாரமும்:

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்திலிருந்து உருவானதே இந்தச் சுயமரியாதைத் திருமண முறையாகும். பாரம்பரியத் திருமணங்களில் பின்பற்றப்படும் பழமைவாதச் சடங்குகள், சாதிப் பாகுபாடுகள் மற்றும் மதப் புரோகிதர்களின் பங்களிப்பு ஆகியவற்றை மறுத்து, சாட்சிகளின் முன்னிலையில் மணமக்கள் தங்களது உறுதிமொழியை அறிவித்து மாலைகளையோ அல்லது மோதிரங்களையோ மாற்றிக்கொள்வதே இத்திருமணத்தின் சிறப்பம்சமாகும். இதில் புரோகிதர்களோ அல்லது விரிவான மதச் சடங்குகளோ தேவைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கடந்த 1967ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பாரம்பரிய மதச் சடங்குகள் இன்றியும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக நடத்திக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us