3 ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதி… முகத்தில் வீக்கம்… விஷ்ணு விஷால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக தான் ஆட்டோ இம்யூன் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் உருவான பக்கவிளைவுகளால் தனது முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் 2 ஆம் பாகம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்துக்காக யூடியூப் சேனல்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் பேட்டியளித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக தான் ஆட்டோ இம்யூன் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆட்டோ இம்யூன் பாதிப்பால் கடந்த 3, 4 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறேன். மேலும் தனது உடல்நிலை பாதிப்பிற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக் கொண்டு வருவதாகவும், அந்த மருந்துகளின் பக்கவிளைவாக முகத்தில் வீக்கம் உள்ளிட்ட சில வெளிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




இதையும் படிக்க : நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன் – வைரலாகும் ரவி மோகன் பதிவு
இந்த சிகிச்சை தனது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது என்பதால், முதலில் தனது ஆரோக்கியத்திற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சூழல் இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரசிகர்களின் அன்பும் ஆதரவும், தான் நம்பிக்கையுடன் செய்து வரும் பணியும், குறிப்பாக ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக உழைத்த படக்குழுவினரிடம் உள்ள பொறுப்புணர்வும் தன்னை தொடர்ந்து செயல்பட ஊக்குவித்ததாக அவர் கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலின் பதிவு
Humbly sharing this with gratitude and love 🙏#GattaKusthi2 pic.twitter.com/FCR9n782RA
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 25, 2026
அதனால்தான் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உடல்நிலை விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ரசிகர்கள் காட்டிய அக்கறையும் வாழ்த்துகளும் தன்னை மேலும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : “நான் தயாக போகிறேன்”… கருவுற்றதை உறுதிப்படுத்திய நடிகை சமந்தா!
‘கட்டா குஸ்தி 2’ படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை 3ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் விஷ்ணு விஷால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.