புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்… தயார் நிலையில் வாக்குச்சாவடி மையங்கள்… பலத்த பாதுகாப்பு!
Puducherry Assembly Election : புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளில் போலீஸ், துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
புதுச்சேரி மாநிலத்தில் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 9- ஆம் தேதி) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவானது நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் 34 பேர், மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் 80 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி பிராந்தியத்தில் உபயோகப்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாகூர் கலைக்கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்தது. இன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகள் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பிரிக்கப்பட்டன.
வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குப்பதிவுக்கு தேவையான மை, எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்… புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை!




வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,099 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,099 விவிபாட் கருவிகள், 1,099 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இது மட்டும் இன்றி வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதனை ஈடு செய்வதற்காக 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவிகள், 459 விவிபாட் கருவிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 30 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர், மாநில போலீசார், தேர்தல் பணி அதிகாரிகள் ஆகியோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் இணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். அந்த அறைக்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா வசதி, வீடியோ பதிவு செய்யும் வசதி, துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 9.50 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர்.
மேலும் படிக்க: காங்கிரஸை முதல் முறை கடுமையாக விமர்சித்த விஜய்… என்ன சொன்னார் தெரியுமா?