200 யூனிட் இலவச மின்சாரம்- ரூ.25000 உதவித்தொகை… தவெக தேர்தல் வாக்குறுதிகள்… விஜய் மாஸ் அறிவிப்பு!
Tvk Election Promises : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.25000 உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கட்சி ஆகியவை சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4 ) புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதே போல, காங்கிரஸ்- திமுக கூட்டணியையும் விமர்சித்து பேசி இருந்தார். மேலும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும், ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் படிக்க: 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள்
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். அதில்,




- புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற முயற்சிப்போம்.
- தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும்.
- மகப்பேறு உதவித் தொகையாக ரூ.25000 வழங்கப்படும்.
- அனைத்து அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
- மீனவர்களுக்கு லிட்டருக்கு ரூ.20 டீசல் மானியம் வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணம் இன்றி மின்சாரம் வழங்கப்படும்.
- புதுச்சேரியில் பயன்பாட்டு அறிவியல் மற்றும் கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
- காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 25 சதவீதம் வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
30 தொகுதிகளில் தவெக கூட்டணி கட்சி போட்டி
இந்த தேர்தலில், பிரதான கட்சிகளான திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளன. இதே போல, தமிழக வெற்றி கழகம் 30 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதற்காக வேட்பாளர்களை அறிவித்தது. இதனிடையே, உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு என்ற குப்புசாமி தனது நேயம் மக்கள் கட்சியை தவெகவுடன் கூட்டணிக்காக இணைத்தார். அதன்படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகள் நேயம் மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 28 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகமும், 2 தொகுதிகளில் நேயம் மக்கள் கட்சியும் போட்டியிட உள்ளன.
மேலும் படிக்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..