சென்னை, ஏப்ரல் 3, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க: ஒரு தொண்டனாக, தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் – அண்ணாமலை பதிவு..
அன்புமணியின் பிரச்சார பயணம்:
ஏப்ரல் 4ஆம் தேதி (நாளை), சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை: சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருதாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகள்.
சென்னையில் பிரச்சாரம்:
தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன், அன்புமணி பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி அளவில் பெரம்பூர் தொகுதிக்கு வரவுள்ள அவர், பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: வெள்ளியங்கிரி மலையில் சோகம்: மலையேறிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!
கடந்த தேர்தல்களில் பாமக பொருளாளராக திலகபாமா திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை முதல் முறையாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தனி கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால், இந்த தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரம்பூர் தொகுதி இந்த முறை “ஸ்டார் தொகுதி” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.