புதுச்சேரியில் ஜவுளி பூங்கா- மாநில அந்தஸ்து- 4 பிராந்தியங்கள் மாநகராட்சியாக தரம் உயர்வு… திமுக அதிரடி வாக்குறுதிகள்!
DMK Election Promises In Puducherry: புதுச்சேரி மாநில மக்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில், முதல்வருக்கு முழு அதிகாரம், நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்துவது, ஜவுளி பூங்கா, மாநில அந்தஸ்து, டிஜிட்டல் நூலகங்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திங்கள்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அழகான புதுச்சேரி மாநிலத்தில் என்டிஏ கூட்டணியின் அலங்கோல ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கோரி 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு மனமில்லாமல் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. இவர்களுக்கான மரியாதை அனைத்தும் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. ஆளுநரின் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகால என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முதல்வர் ரங்கசாமி முயற்சிக்கவில்லை.
மேலும் படிக்க: புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்துக்கான திமுக வாக்குறுதிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,




- புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற்று தருவதற்கு பாடுபடுவோம்.
- துணைநிலை ஆளுநரின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு முதல்வர் தான் முழு அதிகாரம் பெற்றவர் என்பது உறுதி செய்யப்படும்.
- நீதியரசன் சுசீந்திரர் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பெண்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டோடு உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஏஎஃப்டி, சுதேசி, பாரதி மில்கள் மீண்டும் தொடங்கப்பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
- உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
- புதுச்சேரியை மத்திய நிதி குழு வரம்புக்குள் கொண்டு செல்லப்பட்டு 41 சதவீத வரி வங்கீட்டை வழங்க வலியுறுத்துவோம்.
- இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
- மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு பேஷன் தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படும்.
- மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீனவர்களுக்கு நவீன மீன்பிடி படகுகள் காரைக்காலில் மீன்கள் பதப்படுத்தக்கூடிய நவீன பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆயிரம் ஸ்டார்ஸ் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு துறையிலும் படிப்புக்கேற்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
- முழுமையான பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
- ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
- கிராம சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யப்படும்.
- ஆதரவற்ற முதியோர்கள் வாழ மகிழ்ச்சி இல்லம் உருவாக்கப்படும்.
- புதுச்சேரி 4 பிராந்தியங்களில் டிஜிட்டல் வசதியுடன் நூலகங்கள் அமைக்கப்படும். என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் – திமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடி… உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு!