AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக.. முட்டுக்கட்டை போடும் திராவிட கட்சிகள்?

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக.. முட்டுக்கட்டை போடும் திராவிட கட்சிகள்?
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 May 2026 07:18 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டது.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பெரும்பான்மைக்கு தேவை 6 இடங்கள்:

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம், காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெகவின் பலன் 112 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’:

ஆட்சி அமைப்பதற்கான தனது முதல் தேர்வாக, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக நீண்டகால கொள்கை உறவைப் பற்றிப் பேசினாலும், தேர்தல் நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்ட திமுக-வின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டி, தவெக-வுடன் இணைவதில் தவறில்லை என்ற வாதத்தை இரண்டாம் கட்ட நிர்வாகிகள் முன்வைக்கின்றனர்.

திமுக – அதிமுக ரகசியக் கைகோர்ப்பு?

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. திமுக கூட்டணியை உடைத்து தவெக முன்னேறுவது ஸ்டாலினின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், அதிமுக-வுடன் இணைந்து தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக-வின் நிலைப்பாடு:

அதிமுக தரப்பில் ஒரு பிரிவினர் தவெக-வுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுக்க விரும்புவதாகவும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: தவெக இதை செய்யணும்.. தெளிவாக சொன்ன தமிழ்நாடு ஆளுநர்.. அதிகாரப்பூர்வ அறிக்கையில் சொன்னது என்ன?

ஆளுநர் வைத்த ‘ட்விஸ்ட்’:

தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும், இன்னும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை உறுதி செய்த பின்னரே அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பின்னணியில் இருந்து பாஜக அரசியல் செய்வதாகத் திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் செல்லும் இந்த நகர்வுகள், விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us