“குடும்ப ஆட்சிக்கு முடிவு வரும்” – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என பாஜக நம்பிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கஞ்சா புழக்கம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, வரும் தேர்தலில் NDA ஆட்சி அமைவது உறுதி என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். நடிகர் விஜய் கூட்டணி குறித்து தமக்கு தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையின் அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி, முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் கருத்துகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும், சமூக வலைத்தளங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும் – நயினார் நாகேந்திரன்
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் சூழலில் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டதாக கூறினார். “முன்பெல்லாம் பெரியவர்கள் சாதியைச் சொல்லி அழைத்து பேசுவார்கள். அப்போது சாதி உதட்டில் மட்டும் இருந்தது. ஆனால் இப்போது உள்ளத்தில் உள்ளது. அனைவரும் நடிக்க பழகிவிட்டனர்,” என அவர் கூறினார். மேலும், மீடியாவில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சிறிய வார்த்தை தவறும் பெரிய பிரச்சினையாக மாறக்கூடும் என்றும் தெரிவித்தார். ஏஐ காலத்தில் தகவல் போர் அதிகரித்துள்ளதால், கட்சி தலைமை கூறும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பேச்சாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை – முக்கிய பிரச்சினை
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். இதற்கான முக்கிய காரணம் கஞ்சா பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பது குறித்து தற்போது பேச முடியாது என்றும் கூறினார்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி? தவெகவில் திடீர் ஆலோசனை… மாவட்ட செயலர்கள் கூறிய முக்கிய தகவல்!
பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக உருவாக்கப்படும் தகவல்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருப்பதிக்கு சென்றபோது அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் இல்லாமல் இருந்தது, ஆனால் தமிழ்நாட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதை கவனித்ததாகவும் கூறினார். திமுகவினர் திட்டமிட்டு பல இருசக்கர வாகனங்களை பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பி தட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய் கூட்டணி குறித்து பதில்
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது அதுகுறித்து தமக்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பாஜக விஜயை மிரட்டுகிறது என கூறலாம், ஆனால் அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும் கூறினார். மேலும், வரும் 2026 மார்ச் 17ஆம் தேதி அதிமுகவுடன் இணைந்து திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த போராட்டத்திற்குப் பிறகு அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.