வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?
Venezuela Earthquake: உலக அளவில் நிலநடுக்கங்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நில அதிர்வுகள் உணரப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பே, வரவிருக்கும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை கூகுள் வெளியிட்டதாக எக்ஸ் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர்.
உலக அளவில் நிலநடுக்கங்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நிலநடுக்கங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைப்பது மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் காரணமாக பெரும் சேதத்தை ஏற்படுத்தின. முறையே 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கங்கள், கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலாவைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்களாகக் கருதப்படுகின்றன. நில அதிர்வுகள் உணரப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பே, வரவிருக்கும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை கூகுள் வெளியிட்டதாக எக்ஸ் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர்.
கூகுளின் நிலநடுக்கத்திற்கு முந்தைய எச்சரிக்கை
இது தொடர்பாக டான் என்ற பயனர், நில அதிர்வுகள் தொடங்குவதற்குச் சில நொடிகள் முன்பே நிலநடுக்கம் வரப்போவதை கூகுள் எப்படி அறிந்தது என்று கேள்வி எழுப்பிப் பதிவிட்டிருந்தார். கூகுளின் கிரைசஸ் ரெஸ்பான்ஸ் என்ற இணையப்பக்கத்தில் உள்ள தகவலின்படி, Android Earthquake Alerts System என்ற அமைப்பு உலகளவில் நிலநடுக்கங்களைக் கண்டறிந்து, அதிர்வுகள் தொடங்குவதற்கு முன்பே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவிக்கிறது.
நிலநடுக்கம் வரப்போவதை கூகுள் எப்படி அறிந்தது?
இதற்கான விடை உங்கள் ஸ்மார்ட்போனிலேயே உள்ளது. ஒவ்வொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களிலும் அக்சலரோமீட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, நீங்கள் போனை லேன்ஸ்கேப் மோடில் பயன்படுத்தும் போது போன் ஸ்கீரினை தானாகவே சுழல வைப்பது இந்த அக்சலரோமீட்டர் சென்சார் தான். இருப்பினும், இதற்கு மற்றொரு செயல்பாடும் உள்ளது. இது அதிர்வுகளைக் கண்டறிந்து அளவிடக்கூடியது.
நிலநடுக்கத்தால் ஏற்படக்கூடிய அதிர்வுகளை உங்கள் ஸ்மார்ட்போன் கண்டறியும்போது, அது கூகுளின் ‘ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புக்கு’ ஒரு சிக்னலை அனுப்பும் அத்துடன் அந்த நிகழ்வு நடந்த இடத்தின் தோராயமான விவரத்தையும் அனுப்புகிறது. அதன்பிறகு, நிலநடுக்கம் நிகழ்கிறதா என்பதை உறுதிப்படுத்த கூகுளின் சர்வர்கள் பல போன்களிலிருந்து பெறப்பட்ட டேட்டாக்களை ஒருங்கிணைக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு ஸ்மார்ட்போன் அத்தகைய சமிக்ஞையை அனுப்பும்போது, அதே பகுதியில் உள்ள மற்ற போன்களின் டேட்டாக்களையும் சர்வரால் சரிபார்க்க முடியும்.
கணிசமான எண்ணிக்கையிலான போன்களில் ஒரே மாதிரியான அதிர்வுகள் கண்டறியப்பட்டால், கூகுள் நிலநடுக்கம் நிகழ்வதை அடையாளம் கண்டு எச்சரிக்கையை வெளியிடுகிறது. இந்த நெட்வொர்க்கில் 2 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் பங்கேற்பதால், இது உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் அமைப்பாக மாறியுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
ஆண்ட்ராய்டு போனில், Settings பகுதிக்குச் சென்று, search bar-ல் Earthquake Alert என்று டைப் செய்து, அந்த அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும். அது ஆஃப் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அதை ஆன் செய்யவும். ஐபோன் பயனர்கள் Settings பகுதிக்குள் உள்ள Notifications என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழே ஸ்க்ரோல் செய்து, Government Alerts என்பதன் கீழ் உள்ள எச்சரிக்கை வகைகளைச் செயல்படுத்த வேண்டும்.