Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி..

Minister K.N. Nehru Statement: திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jul 2025 07:00 AM

அமைச்சர் கே.என். நேரு அறிக்கை: திமுக கூட்டணி கட்சிகளை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா என கேள்வி கேட்டு அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி, பிரச்சாரப் பயணத்தின் போது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்

ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விசிக தரப்பிலும் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலும் இந்த அழைப்பை நிராகரித்தனர். அதனை தொடர்ந்து திருவாரூரில் பிரச்சார பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு பதிலடி:

தமிழகத்தில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதிக் கொடுத்ததாகவும் அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்கிறார்கள் எனவும் பேசி உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கே.என், நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி அவர்களே! ’சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்!’, ’மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’, ’மகனைக் காப்போம்; சம்பந்தியை மீட்போம்’ எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம்.

கூட்டணி கணக்கை போடும் முதலாளிகள்:

ஆனால், அதிமுகவின் கூட்டணி கணக்கை டெல்லியில் இருக்கும் பழனிசாமியின் முதலாளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். ஆனால், கூட்டணிக்குத் தலைமை தாங்குவதாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல அமித்ஷா பக்கத்தில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

அதிமுக கூட்டணி அமைந்தாலும் அதனை ’அதிமுக கூட்டணி’ என்று அதிமுகவினரைத் தவிர மற்றவர்கள் யாருமே சொல்வதில்லை. அதிமுக, பாஜக, தமாகா தவிர அந்தக் கூட்டணியில் வேறு யாருமே இல்லாததால், ’மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’ பயணத்தில் கூட்டணிக்கு மீண்டும் ஆள் பிடிக்க இறங்கிவிட்டார் பழனிசாமி. ’பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ரத்னக் கம்பளத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.

அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்:


கோவை பயணத்தில், “கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று பேசியவர், சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். ‘எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்கிறார். ’கோவையில் பேசியவரும் சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா?’ என்று வாக்காளர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? என முடிவு

பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் பழனிசாமியின் அழைப்பைக் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன.

பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை ?

இப்படி திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

’’அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார் பழனிசாமி. அமித்ஷா வீட்டிற்குப் போவதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! எதற்காக மக்கள் பிரச்னையை பேச கார்களில் மாறி மாறிப் போக வேண்டும்? ’டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்?