தமிழகத்தில் சிங்கப் பெண்கள் கர்ஜனை… களமிறங்குகிறது சிறப்பு அதிரடிப்படை.. அரசாணை வெளியீடு!
Singapengal Special Task Force : தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல்வராக பதவியேற்ற விஜய் கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், விசிக உள்ளிட்ட 5 கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 10) பொறுப்பேற்றார். அப்போது, தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதமாக 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதன்படி, தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகன் வெளியிட்டார். அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அளிக்கும் வகையிலும் தனி சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட உள்ளது.
சிங்கப் பெண்கள் சிறப்பு படை செயல்படும் விதம்
இதில், ஆபத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு விரைந்து உதவிகளை வழங்கவும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த சிங்கப் பெண்கள் சிறப்பு அதன் அடிப்படையில் செயல்படும். இந்த படையில் தமிழகம் முழுவதும் போதிய போலீசார் மற்றும் அதிநவீன வசதிகள் அமைக்கப்படும். முதல்வர் ஜோசப் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் இந்த சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.ஜி. தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், பிற பதவிகளை சேர்ந்த 20 போலீசார் பணியில் இருப்பார்கள்.
மேலும் படிக்க: திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு – வெளியான அறிவிப்பு




குற்றச்சம்பவங்கள் நிகழும் இடங்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். மேலும், பொது இடங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில், போலீசாரின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேம்படுத்தப்படும். இதை தவிர்த்து, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதிக அளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் மீது விரைந்து நடவடிக்கை
இதில், ஏதேனும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த புகார் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன் பிற உதவிகளும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். சமூக நலத்துறை, கல்வித்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து – வெளியான தகவல்