“தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மக்கள் முன் முதல் கையெழுத்து வரை”.. உறுதிமொழியேற்பு விழாவில் நடந்த மாற்றங்கள்!!
Changes in Vijay Oath-Taking Ceremony: ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, பதவியேற்ற 9 அமைச்சர்களும் விஜய்யை பின்பற்றி ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்றே உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படும்? முழு விவரம் இதோ!
பதவியேற்பு நிகழ்ச்சியில் முக்கிய மாற்றங்கள்:
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இதுவரை தமிழகத்தில் இல்லாத சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில், குறிப்பாக பதவியேற்புக்கு முதல்வர் விஜய், கோட் சூட் அணிந்து வந்தது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதுமையான மாற்றமாக பார்க்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்:
தொடர்ந்து, விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்தை வந்தே மாதரம் முந்திக் கொண்டது. மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அரசு நிகழ்வில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து, வந்தே மாதரத்துக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி:
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து, பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கு விஜய்யை பின்பற்றி ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்றே உறுதிமொழி ஏற்றனர்.
மக்கள் முன் முதல் கோப்பில் கையெழுத்து:
வழக்கமாக முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர்கள், தலைமைச் செயலகம் சென்றே முதல் கோப்புகளில் கையெழுத்திடுவர். ஆனால், விஜய் தான் பதவியேற்றதும் மக்கள் முன்பே தனது முதல் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக, கடந்த ஆட்சியில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்கும்போது ஒரே குரலாக, ‘உளமாற உறுதி மொழிகிறேன்’ என்ற சொற்களைப் பயன்படுத்தினர்.
ஜெயலலிதா பானியில் விஜய்?
அதேசமயம், கடந்த காலங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டபோது ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும், முதல்வர்களாகப் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக அனைத்து அதிமுக அமைச்சர்களும் ஆண்டவன் பெயர் சொல்லியே பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று பதவியேற்ற விஜய்யும், அவரது அமைச்சர்களும் ஆண்டவன் ஆணையிட்டு உறுதிமொழி ஏற்றது ஜெயலலிதா பானி அரசை விஜய் முன்னெடுக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.