திமுக – தவெகவினர் மோதல்… வாணியம்பாடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்…!
Tamilnadu Assembly Election: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே திடீரென மோதல் ஏற்றபட்டது. இதனால், அந்தப் பகுதியல் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரு கட்சியினர் இடையே போலீசார் சமரசம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாணியம்பாடி பகுதியில் பெரியபேட்டை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 73- ஆவது வாக்குச்சாவடி மையத்தில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்தபோது, அந்த பகுதியில் திரண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபேட்டை பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்
உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களையும் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். இந்த மோதல் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், திமுக மற்றும் தவெகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வந்திருந்த வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுரமும் சிதறி ஓடினர். இரு கட்சிகளை சேர்ந்தவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டையில் திமுக – பாஜகவினர் மோதல்
இதே போல, சென்னை ஆழ்வார்பேட்டையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வந்த நிலையில், அவர் முன்னிலையில் திமுக மற்றும் பாஜகவினர் திடீர் மோதலில் ஈடுபட்டனர். இதில், அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு கட்சிகளை சேர்ந்தவர்களையும் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து வருகின்றனர்
வாக்குப்பதிவு நிறுத்தம் செய்ய வேண்டும்
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐடி கார்டு இல்லாமல் சிலர் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். பொதுமக்களிடம் ஐடி கார்டு இல்லயெனில் வெளியே அனுப்புகின்றனர். ஆனால், அந்த நபர்கள் மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வாக்குச்சாவடி மையத்தில் முறையான வாக்குப்பதிவு நடைபெறவில்லை எனில் வாக்குப்பதிவு நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் மு. க. ஸ்டாலின் வீடு இருக்கும் தைரியத்தில் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். எனவே, தேர்தல் முறையாக நடக்கிறதா என்று தேர்தல் அதிகாரி கண்காணிக்க வேண்டும். ஏதேனும் முறைகள் இருந்தால் இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.