காங்கிரஸ் கேட்கும் 35 இடங்கள்.. இன்று நடக்கும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
DMK - CONGRESS: திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், 2021ஆம் ஆண்டு எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றிருந்தனவோ அதே கட்சிகள் தற்போது இடம் பெற்றுள்ளன. கூடுதலாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளன. எனவே, திமுக கூட்டணியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது.
பிப்ரவரி 28, 2026: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், வரவிருக்கும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது. இதில் பிரதான போட்டி அதிமுக மற்றும் திமுக இடையே தான் இருந்து வருகிறது.
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், 2021ஆம் ஆண்டு எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றிருந்தனவோ அதே கட்சிகள் தற்போது இடம் பெற்றுள்ளன. கூடுதலாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளன. எனவே, திமுக கூட்டணியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது.
அதிமுகவை எடுத்துக் கொண்டால், பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி:
திமுகவைப் பொருத்தவரையில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கிடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அதாவது, ஒரு தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் அதிகாரப் பங்கும் அதிக தொகுதிகளும் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அகில இந்திய தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், “திமுக–காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகத்தான் உள்ளது. எந்த குழப்பமும் இல்லை. தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம். தனிநபர்கள் கூறும் கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க மாட்டோம்” என தெரிவித்தார்.
அதே சமயம், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிஷ் தொண்டர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருக்க விரும்பாத கட்சி ஏதேனும் உள்ளதா? நாங்கள் என்ன அறக்கட்டளை நடத்துகிறோமா?” என பகிரங்கமாக பேட்டி அளித்திருந்தார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:
இந்தச் சூழலில், பிப்ரவரி 28, 2026ஆம் தேதியான இன்று, திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேல்நிலை பொறுப்பாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆழ்வார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக 35 தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை இடங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திமுக தரப்பில் ஏற்கனவே 25 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
எனவே, இன்றைய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி கோரும் இடங்கள் ஒதுக்கப்படுமா அல்லது திமுக வழங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்படுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விடயமாக உள்ளது. ஏற்கனவே ஒரு தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கூடுதல் இடங்கள் வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமரசம் எட்டப்படுமா அல்லது காங்கிரஸ் தரப்பில் மீண்டும் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்படுமா என்பது குறித்து பின்னர் தெரியவரும்.