பெரம்பூர் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.. விஜய்யை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!
Udhayanidhi criticized Vijay : தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர் போட்டியிடுகிறார். அவர் வெறும் அட்டைக் கத்தி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். அந்த தேர்தலில் இந்த தொகுதி மக்கள் அவருக்கு வாக்களித்து சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதே போல, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். இந்த தொகுதியில் போட்டியிடும் நபர் ஒருவர் பெரம்பூருக்கும், பெரம்பலூருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதுடன், வெற்றி பெற்று விடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
பெரம்பூர் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்
அந்த நபர் இதற்கு முன்பு இந்த தொகுதி மக்களை வந்து சந்தித்தது கிடையாது. ஆனால், ஆர்.டி சேகர் தேர்தலுக்காக மட்டும் இன்றி சாதாரண நாட்களில் கூட இந்த தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். மழைக் காலத்தில் ஆர். டி. சேகர் மக்களோடு மக்களாக நின்று பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இது மட்டும் இன்றி கொரோனா காலகட்டத்தில் அவரது உயிரை பணயம் வைத்து இந்த தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!




விஜய்யை அட்டைக்கத்தி என விமர்சனம்
பெரம்பூர் தொகுதியில் தப்பி தவறி வேறு யாராவது வெற்றி பெற்று விட்டால் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு சென்று அவர்களது வீட்டின் வாசலில் காத்து கிடக்க வேண்டும். அந்த வீட்டின் கதவை தாண்டி உள்ளே செல்ல முடியாது. இதனை இந்த தொகுதி மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர் போன ஆர்.டி. சேகர் வேண்டுமா அல்லது சோம்பேறித்தனத்துக்கு, ஓய்வுக்கும் பெயர் போன வெறும் அட்டை கத்திகள் வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி
மகளிர் உரிமை தொகையை நிறுத்துவதற்காக அதிமுக மற்றும் பாஜக முயற்சி செய்தது. அதை தெரிந்து கொண்ட முதல்வர் முன்னதாகவே அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.5 ஆயிரத்தை வர வைத்தார். தொகுதி மறு வரையறை மசோதாவை இந்தியாவில் முதல் முதலாக எதிர்த்தது நமது முதல்வர் தான். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. அதன்படி, பெரம்பூர் தொகுதியில் ஆர். டி. சேகரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!