“இனி MRP-ஐ விட ரூ.1 கூட கூடுதல் விலைக்கு விற்க மாட்டோம்!”.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் அதிரடி!!
No Extra Charges on MRP in Tasmac Shops: டாஸ்மாக் அமைச்சருடனான சுமுக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள MRP விலையை விட ₹1 கூட கூடுதலாக வசூலிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கொள்கை முடிவெடுத்துள்ளது.
சென்னை, ஜூலை 30: தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ.1 கூட கூடுதலாகப் பெற மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அதிரடியான கொள்கை முடிவை அறிவித்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருடன் நடைபெற்ற சுமுகமான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சங்கத்தின் மாநிலத் தலைவர் மூக்கு பழனி பாரதி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து இத்தகவலைத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..
MRP-ஐ விட கூடுதல் விலை இல்லை:
அமைச்சருடனான சந்திப்பு குறித்து சங்கத் தலைவர் மூக்கு பழனி பாரதி கூறுகையில், “அமைச்சரைச் சந்தித்துப் பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகளைப் பேசினோம். அப்போது, கடைகளில் அச்சிடப்பட்ட MRP விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்கக் கூடாது என்ற கண்டிஷனை அமைச்சர் முன்வைத்தார். பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் கருதி, அமைச்சரின் கோரிக்கையை ஏற்று MRP-க்கு மேல் ₹1 கூட கூடுதலாக விற்பதில்லை என்ற கொள்கை முடிவை எங்களது செயற்குழுவில் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
கடை நிர்வாகச் செலவுகள் குறித்து முறையீடு:
அதேநேரத்தில், கடைகளில் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துக் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். சரக்கு இறக்கக் கூலி, உடைந்துபோகும் மது பாட்டில்களுக்கான நஷ்டம், காலி பாட்டில்கள் சேகரிப்பு மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவுகள் ஆகியவற்றை ஊழியர்களே தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஏற்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் செலவினங்களைச் சரிசெய்யத் தகுந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின் போது காலி பாட்டில்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஊழியர்களின் பிரதான கோரிக்கைகள்:
மாநிலத்தில் உள்ள 4,200 சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் சுமார் 24,000 ஊழியர்களின் நலன் சார்ந்து பின்வரும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த 24 ஆண்டுகளாகக் குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கான பணி ஆணை ரத்து.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
அரசுக் கொள்கை முடிவின்படி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், 50 வயதை எட்டியுள்ள ஊழியர்களுக்கு மாற்று அரசுத் துறைகளில் பணி வழங்கிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அமைச்சரின் சாதகமான பதில்களைத் தொடர்ந்து, அரசுக்கும் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.