ராஜ்ய சபா தேர்தல்… காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு!
Congress Rajya Sabha candidate: காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணி புரிந்துள்ளார். இவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதில், கடந்த சில நாள்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று, காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரிடம் ஆகியவை திமுக சார்பில் இருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி ஆகும். இந்த நிலையில், திமுக வசம் உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் ஒன்று தேமுதிகவுக்கும், மற்றொன்று காங்கிரஸ் கட்சிக்கும், மீதமுள்ள 2 திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் அறிவிப்பு
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், வட மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்துள்ளார். இவர், ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனுக்கு நேரடியாக சென்று அங்குள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை ( மார்ச் 5) பிற்பகல் 12 மணிக்கு மேல் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வழியாக உள்ளது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த மூத்த தலைவர்கள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பெறுவதற்காக அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்
திருச்சியில் பிறந்து வளர்ந்த கிறிஸ்டோபர் திலக் எம்.பி.ஏ. வரை படித்துள்ளார். இவரது தந்தை முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். இவர், 2- ஆம் தலைமுறை பட்டதாரி. தலித் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தனது 30 வயதில் அந்த வேலையை விட்டு விட்டு, அரசியல் பணிக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக உறவை ஏற்படுத்தி கொண்டதுடன், கட்சி பணியாற்றி வந்தார். தற்போது, கட்சியில் சாதாரண நிலையில் இருந்து, ஒரு உயரிய எம்பி பதவிக்கு உயர்ந்துள்ளார் கிறிஸ்டோபர் திலக்.
மேலும் படிக்க: மாநிலங்களவை தேர்தல்.. வேட்பாளரை அறிவித்த அதிமுக.. ஒரு சீட் பாமகவிற்கு ஒதுக்கீடு..