திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அளித்த சிறப்பான பரிசு… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
Edappadi K Palaniswami: திராவிட முன்னேற்றக் கழகத்தை தாங்கி பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அந்தக் கட்சியினர் சிறப்பான பரிசை அளித்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம் செய்தார். சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிடாதது குறித்து தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஏப்ரல் 6- ஆம் தேதி (திங்கள்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் நிச்சயமாக வெல்லும். தேமுதிகவுக்கு 4 சதவீத வாக்கு வங்கி இருப்பது தான் நானும் கூறினேன். 2026- ஆம் ஆண்டில்தான் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினரிடம் வழங்குவதாக தெளிவுபடுத்தி உள்ளேன். திமுக கூட்டணியை தாங்கி பிடித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு அந்த கட்சியினர் சிறப்பான பரிசை அளித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளியில் ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் உள்ளன. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தொடரப்படும்.
முன்மாதிரியாக விளங்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதி
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி முன்மாதிரியாக விளங்கி வருகிறது. ஏற்கெனவே இந்த தொகுதிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ஏதேனும் திட்டங்கள் நிறைவேற்றாமல் இருந்தால் கிடைக்கும் வாய்ப்பில் நிறைவேற்றிக் கொள்வேன். மேட்டூர் அணையில் இருந்து ஏராளமான உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், ஏரிகள் குளங்களை திமுக அரசு நிரப்பாமல் உள்ளது. குறிப்பாக, நான் அடிக்கல் நாட்டிய பகுதியில் தண்ணீர் வராமல் உள்ளது. இதனை திமுக அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு
நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் விவகாரம்
மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உள்பட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கன்னியாகுமரியில் வருகிற 15- ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உள்ளேன். திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இது தொடர்பாக. தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றமும் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது.
அதிமுக ஆட்சியல் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை
அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவை, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சியாக இருந்து வரும் அதிமுகவை பிரதான கட்சியாக விஜய் பார்க்காதது அவரது அறியாமையை வெளி காட்டுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போது வீட்டு சிறையில் வைக்கப்பட்டார் என்ற கருத்தை ஆ. ராசா பேசிய ஆடியோவின் அடிப்படையில் தெரிவித்திருந்தேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இறுதிகட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: அமித் ஷா, ராகுல் காந்தி இன்று வருகை.. பரபரப்பாகும் அரசியல் களம்



