இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. பான் கார்டு தளர்வு முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரை.. முழு விவரம்!!
வங்கிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு விதிகளில் முக்கிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வங்கிக் கணக்குகளில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் டெபாசிட் செய்வதற்குப் பான் கார்டு கட்டாயமாக இருந்தது. ஆனால், இன்று முதல் இந்த டெபாசிட் நடைமுறைக்கு பான் கார்டு கட்டாயம் இல்லை.
நாடு முழுவதும் இன்று (ஜூன் 1) முதல் நிதி சார்ந்த நடைமுறைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அந்த முக்கிய விபரங்களின் தொகுப்பு குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!
பான் கார்டு விதிகளில் மாற்றம்:
வங்கிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு விதிகளில் முக்கிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வங்கிக் கணக்குகளில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் டெபாசிட் செய்வதற்குப் பான் கார்டு கட்டாயமாக இருந்தது. ஆனால், இன்று முதல் இந்த டெபாசிட் நடைமுறைக்கு பான் கார்டு கட்டாயம் இல்லை என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
சொத்து பரிவர்த்தனை வரம்பு உயர்வு:
ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான பணப் பரிவர்த்தனை வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொத்து பரிவர்த்தனைகளுக்கான வரம்பு இதற்கு முன்பு 10 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், இன்று முதல் அது 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
ஏடிஎம் கட்டணங்கள் உயர்வு:
வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் இலவச வரம்பைக் கடந்த பிறகு விதிக்கப்படும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றன. அதன்படி, சொந்த வங்கியின் ஏடிஎம் மற்றும் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பது, இருப்புச் சரிபார்ப்பு (Balance Inquiry) போன்றவற்றுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மேலும், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
UPI செயலிகளில் அதிகாரப்பூர்வ பெயர் மட்டுமே:
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதற்காக, இந்தியத் தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான புனைப்பெயர்களை இனி வைக்க முடியாது. வங்கி ஆவணங்களில் உள்ள பயனரின் அதிகாரப்பூர்வ அசல் பெயர் மட்டுமே பரிவர்த்தனையின் போது திரையில் தோன்றும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
LPG சிலிண்டர் மற்றும் கார்கள் விலை உயர்வு
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், உலகளாவிய விநியோகத் தட்டுப்பாடு காரணமாக விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாருதி சுசுகி, ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் மாடல்களின் விலைகளும் இன்று முதல் உயர்த்தப்படுகின்றன.
இதையும் படிக்க: எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்?.. ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை?
பருத்தி இறக்குமதி வரி ரத்து:
நெசவு மற்றும் ஜவுளித் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை (Customs Duty) இன்று முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் பருத்தி தட்டுப்பாடு நீங்கி, நூல் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்:
தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் (Biometric Attendance) வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. இனி அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக, டிஜிட்டல் முறையில் கைரேகை பதிவு மூலமே வருகை கண்காணிக்கப்படும்.