Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுனாமியில் மக்களை காப்பாற்றியவர்.. இன்று 1000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி – யார் இந்த விஜய் அரிசெட்டி!

Tsunami Hero to Leader : இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட் விஜய் அரிசெட்டி, 2004 சுனாமி பேரழிவில் இருந்து நூற்றுக்கணக்கான உயிர்களை மீட்டு, சௌரிய சக்கரம் எனும் இந்தியாவின் உயரிய விருதைப் பெற்றவர். ஆனால் ஒரு விபத்தில் காயமடைந்த பிறகு பைலட் வாழ்க்கை முடிவுற்றது. சாதாரண வாழ்வை ஏற்காமல், மேனேஜ்மென்ட் துறையில் மேற்படிப்பு படித்து, MyGate எனும் ஸ்மார்ட் பாதுகாப்பு செயலியை 2016-ல் தொடங்கினார். அவரது வெற்றிக்கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுனாமியில் மக்களை காப்பாற்றியவர்.. இன்று 1000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி – யார் இந்த விஜய் அரிசெட்டி!
விஜய் அரிசெட்டி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Aug 2025 12:19 PM IST

இந்திய விமானப்படையின் (Air Force) முன்னாள் பைலட்டாக பணியாற்றிய விஜய் அரிசெட்டி வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு விபத்துக்கு பிறகு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றிக்கொண்டு, ரூ.1,670 கோடி மதிப்பில் புதிய வணிக சாம்பிராஜ்யத்தையே கட்டமைத்திருக்கிறார். தற்போது அவர் உருவாக்கியுள்ள மைகேட்  (MyGate) எனும் ஸ்மார்ட் டிஜிட்டல் பாதுகாப்பு சேவை நிறுவனம் இந்தியாவின் நகர்ப்புறக் குடியிருப்பு வாசிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கி வருகிறது. மைகேட் என்ற டிஜிட்டல் பாதுகாப்பு செயலி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் டெலிவரி மேலாண்மை போன்ற சேவைகளை ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கி வருகிறது.

சுனாமியில் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய வீரர்

விஜய் அரிசெட்டி இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பல அவசர மீட்பு பணிகளில் ஈடுபட்டவர். கடந்த 2004 ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட சுனாமியின் போது, தனது உயிரை பணையம் வைத்து நூற்றுக்கணக்கான மக்களை உயிருடன் மீட்டிருக்கிறார். இதனையடுத்து அவரது வீரதீர செயலை கௌரவிக்கும் விதமாக, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான சௌரியச் சக்கரம் (Shaurya Chakra) வழங்கப்பட்டது. அவருக்கு இந்திய இராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு அவர்களது துணிச்சலான செயல்களைப் பாராட்டி வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு தலைவராகும் தமிழர் – யார் இந்த ஆர்.துரைசாமி?

பைலட் வாழ்க்கையிலிருந்து புரட்சி

நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற விஜய் விமானப்படையில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் சேவை செய்தார். ஆனால் ஒரு விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பைலட் வாழ்க்கையை அவரால் தொட முடியவில்லை. சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பாத விஜய், ஹைதராபாத் இந்தியா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ISB) சேர்ந்து மேனேஜ்மென்ட் படிப்பை படித்தார். அதன் பின்னர், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றார்.

மைகேட் நிறுவனத்தை உருவாக்கிய விஜய்

நகர்ப்புற பாதுகாப்பில் உள்ள குறைகள், பாதுகாவலர்களுக்கு உள்ள பிரச்னை மற்றும் நிர்வாக பிழைகள் ஆகியவை விஜய்யின் கவனத்திற்கு வந்தன. இதற்கான தீர்வாக 2016ஆம் ஆண்டு விஜய் அரிசெட்டி “MyGate” என்ற டிஜிட்டல் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தினார். அவருடன்  அபிகேஷ் குமார், ஸ்ரேயன்ஸ் டாகா ஆகியோர் இணைந்து இந்த செயலிலை உருவாக்கினர்.

இதையும் படிக்க: 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை

அவரது மைகேட் செயலி பாதுகாப்பை உறுதி செய்வது மட்டும் அல்லாமல், டெலிவரி மேலாண்மை, வாடகை மற்றும் சொத்து வாங்கும் வசதி போன்ற பல அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தற்போது இந்தியாவின் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஹீரோவை விட உயர்ந்த பிஸினஸ் தலைவர்

ஒரு பாதுகாப்பு வீரராக தன் சேவையைத் தொடங்கி, அதன் பிறகு வணிக உலகில் ஒரு முன்னணி நிறுவனத்தை உருவாக்கிய விஜய் அரிசெட்டி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்கு பார்வை இருந்தால் ஒருவரால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். பாதுகாப்பு வீரராக மக்களின் உயிரைக் காப்பாற்றியபோதும் சரி, மக்களின் பாதுகாப்புக்கு செயலியை உருவாக்கிய வரையிலும் எப்பொழுதும் அவர் ஹீரோவாகவே திகழ்கிறார்.