வாடிக்கையாளர்களின் ரூ.4.58 கோடி பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்.. உஷாராக இருப்பது எப்படி?
Bank Account Protection From Scams | இந்தியாவில் சமீப காலமாகவே வங்கி மற்றும் நிதி சார்ந்த மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள்.
                                இந்தியாவில் வங்கி மோசடி மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இத்தகைய மோசடிகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்த நிலையில், தற்போது புது விதமாக வங்கி மேலாளரே வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் எங்கு நடைபெற்றது, மேலாளர் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்தது எப்படி, இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
100 வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்
தங்களது பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். ஆனால், வங்கியிலே மோசடி நடைபெற்றால் என்ன செய்வது. மின்ட் செய்தியின் படி, ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த சாஷி குப்தா என்ற 43 வயது பெண், வாடிக்கையாளர்கள் 110 பேரின் வங்கி கண்க்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். முன்னதாக, அவர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண்களை மாற்றிய அவர், பின்னர் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இவ்வாறு சூரையாடிய வாடிக்கையாளர்களின் பணத்தை அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பலர் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
வங்கி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள்
வங்கி மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்துங்கள்
வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளின் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கே ஆபத்தாக மாறிவிடலாம்.
கணக்கு இருப்பை சோதித்துக்கொண்டே இருங்கள்
உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை சோதனை செய்துக்கொண்டே இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் அது தெரியவந்துவிடும்.
வங்கியுடன் தொடர்பில் இருங்கள்
உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது இருப்பில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றினால் உடனடியாக வங்கிகளை தொடர்ப்புக்கொண்டு அது குறித்த உங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றும் பட்சத்தில் வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.