தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப PRS-ல் புதிய மாற்றத்தை மேற்கொள்ளும் இந்திய ரயில்வே.. 40 ஆண்டுகளில் இல்லாத புதிய மாற்றம்!
Passenger Reservation System Upgrade | இந்திய ரயில்வே பயணிகள் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுமார் 40 ஆண்டுகளாக இருந்து வந்த பயணிகள் முன்பதிவு அமைப்பை புதிய தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்க உள்ளது.
சென்னை, ஜூன் 09 : இந்திய ரயில்வே (Indian Railway) இதுவரை இல்லாத மிகப்பெரிய ரயில்வே முன்பதிவு அமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, 2026 ஆகஸ்ட் மாதம் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு புதிய பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு (PRS – Passenger Reservation System) மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் முறையை இந்த புதிய அமைப்பு மாற்றம் செய்ய உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை
ரயில் டிக்கெட் முன்பதிவை மேம்படுத்த இந்த புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அமைப்பின் அளவை அதிகரித்து, பயணிகள் சிறப்பான பயணத்தை மேற்கொள்ள இது உதவி செய்யும். ரயில் பவனில் நடைபெற்ற இதற்கான ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பங்கேற்றார். இந்த மாற்றத்தின்போது, பயணிகள் எந்த வித சிக்கல்களையும் எதிர்க்கொள்ள கூடாது என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க : ஓய்வு காலத்தில் பொருளாதார பாதுகாப்பு.. இப்படி பிளான் பண்ணுங்க!




40 ஆண்டுகள் பழைய அமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றம்
தற்போது பயன்பாட்டில் உள்ள பயணிகள் முன்பதிவு அமைப்பு 1986 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இந்த அமைப்பு கடந்த பல ஆண்டுகளில் மிக குறைவான மாற்றங்களை மட்டுமே கண்டுள்ளது. இந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட வளர்ச்சியை பயன்படுத்தி புதியதாக வடிவமைக்கப்பட உள்ளது. அதாவது, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்பட்டுள்ள தேவைக்கு ஏற்ப இந்த அமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க : இந்திய ரூபாய்க்கு பின்னால் இருக்கும் கலாச்சார, வரலாற்று உண்மைகள்.. முழு விவரம் இதோ!
இந்திய ரயில்வே 2002 ஆம் ஆண்டு முதல் முதலாக ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு அம்சத்தை தொடங்கியது. இந்த நிலையில், தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் நேரில் சென்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை விடவும், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதையே விரும்புகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் சுமார் 88 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.