ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி எப்போது? வெளியான தகவல்
PF Withdrawal Through ATM : இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் புதிய வசதி இந்த 2026ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதிக்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் புதிய வசதி இந்த 2026ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதிக்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை இந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், அமைப்பின் கணினிக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்ததால், இந்தத் திட்டம் தாமதமானது. இதனால், இந்த வசதி எப்போது வரும் என்று கோடிக்கணக்கான பணியாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி எப்போது?
இந்த நிலையில் வங்கிகளுடன் இணைந்து யுபிஐ வசதிக்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதால், இந்த 2026 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செயலி, பீம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ரூ.20 லட்சம் உத்தரவாதம் இல்லாத கடன்.. அரசின் அசத்தல் முத்ரா யோஜனா கடன் திட்டம்!




எவ்வளவு பணம் எடுக்கலாம்?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 75 சதவிகிதம் வரை யுபிஐ மூலம் எடுக்க முடியும். குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகை கணக்கில் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே, கணக்கில் உள்ள முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்க இயலாது. இபிஎஃப்ஓ இணையதளத்தை இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய தளத்துக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இது முடிந்த பிறகே யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதிகள் தொடங்கப்படும்.
புதிய இணையதளம் எந்தத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாதவாறு சீராக இயங்குவது உறுதி செய்யப்பட்ட பிறகே, இந்தச் சேவைகள் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. இணையதள மாற்றம் மட்டுமின்றி, வங்கிகளுடனான இணைப்பு, யுபிஐக்கான தனிச் செயலி உருவாக்கம், இணையதளத்தில் கூடுதல் வசதிகள் சேர்ப்பு போன்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால், டிசம்பர் முதல் யுபிஐ, ஏடிஎம் ஆகிய இரு வசதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்.. தவறவிட்டால் ரூ.2,500 வரை அபராதம்.. இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தற்போது பிஎஃப் பணம் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்தால், அந்தத் தொகை வங்கிக் கணக்குக்கு வந்து சேர சுமார் 3 நாட்கள் ஆகிறது. யுபிஐ வசதி நடைமுறைக்கு வந்தால், சில மணி நேரங்களிலேயே பணம் கைக்குக் கிடைக்கும். அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி பிஎஃப் என்ற திட்டத்திற்கு எதிராக இருப்பதாக ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.