தங்க நகைக் கடன் வாங்கியுள்ளீர்களா?.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
RBI Gold Loan Warning To NBFC's | இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தங்க நகைக் கடன்களின் வரம்பு மீறியுள்ளது. இதன் காரணமாக தான் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தங்க நகைக் கடன் (Gold Loan) மிகவும் பிரபலமாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அவசர நிதி தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள தங்களிடம் உள்ள நகைகளை தான் அடகு வைக்கின்றனர். குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதன் காரணமாக பலரது முதன்மை தேர்வாக தங்க நகைக் கடன் உள்ளது. இவ்வாறு இந்தியர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்க நகைக் கடன் உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய எச்சரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மற்றும் நிதி நிறுவனங்கள் (Financial Institutions) வெளியிட்டுள்ளன. அவை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய ஆர்பிஐ
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வரலாற்று உச்சத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. உதாரணமாக, வெறும் 10 மாதங்களில் தங்கம் சுமார் ரூ.30,000-க்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதன் காரணமாக, நகைக் கடன்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC – Non Banking Financial Institutions) ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : தொடர் சரிவுக்கு மத்தியில் திடீர் டிவிஸ் கொடுத்த தங்கம்.. இதுக்கும் அமெரிக்கா தான் காரணம்!




கடன் மதிப்பு விகிதத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம்
தங்கம் விலை சரிவு காரணமாக தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் மதிப்பு விகிதத்திற்கு (Loan – to – Value Ratio) அபாயம் ஏற்பட்டுள்ளதே இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு குறைந்து மத்திய வங்கி நிர்ணயம் செய்துள்ள அளவான 85 சதவீதம் என்ற கடன் மதிப்பு விகித வரம்புக்கு கீழே சென்றுள்ளது.
இதையும் படிங்க : வங்கி கணக்கில் எடுக்காமல் இருக்கும் பணம்.. ஆர்பிஐ அசத்தல் அம்சம்!
தங்கத்தின் மதிப்பு குறைந்துவிட்டது
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டபோது வங்கிகள் ரூ.1 லட்சம் தங்க நகைகளுக்கு கடனை வழங்கி இருக்கும். ஆனால், தற்போது தங்கத்தின் மதிப்பே ரூ.93,000 ஆக உள்ளது. அதாவது கொடுத்த கடன் அதிகமாகவும், தங்கத்தின் மதிப்பு குறைவாகவும் உள்ளது. எனவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக வங்கிகள் தங்க நகைக் கடன் பெற்றவர்களை தொடர்புக்கொண்டு குறிப்பிட்ட தொகை அல்லது கூடுதல் நகையை அடகு வைக்க கோரும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.