தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் குறைந்த வட்டி?
Diwali 2026 Car Loan Offers : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு பல்வேறு வங்கிகள் சிறப்புக் கடன் சலுகைகளை அறிவித்துள்ளன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கார் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைந்தபட்சம் 7.55 சதவீதத்தில் இருந்து வழங்குகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு பல்வேறு வங்கிகள் சிறப்புக் கடன் சலுகைகளை அறிவித்துள்ளன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கார் கடன்களுக்கான (Car Loan) வட்டி விகிதங்களைக் குறைந்தபட்சம் 7.55 சதவீதத்தில் இருந்து வழங்குகின்றன. மேலும், சில வங்கிகள் கடன் பரிசீலனைக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளன. இதனால் புதிய கார் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள், வட்டி விகிதம், மாதத் தவணை மற்றும் கூடுதல் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து கடன் பெறலாம்.
தீபாவளியை முன்னிட்டு கார் லோனுக்கான வட்டி விகிதங்கள்
2026 அக்டோபர் 23 ஆம் தேதி நிலவரப்படி, வங்கிகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பேங்க் பஜார் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சில வங்கிகளில் கார் கடனுக்கான தொடக்க வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.55 சதவீதமாக உள்ளது.இருப்பினும், வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர், மாத வருமானம் உள்ளிட்ட காரணங்களைகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.
இதையும் படிக்க : ரூ.10,000 மாத சம்பளம் வாங்கும் நபரின் வங்கி கணக்கில் வந்த ரூ.10,000 கோடி.. ராஜஸ்தானில் ஷாக் சம்பவம்!




பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் கனரா வங்கியில் வட்டி எவ்வளவு?
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை உள்ளது. ரூ.5 லட்சம் கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்கான மாதத் தவணை சுமார் ரூ.10,067 முதல் ரூ.11,122 வரை இருக்கும். இந்த வங்கியில் கடன் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும், தகுதியான ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தில் 0.25 சதவீதப் புள்ளிகள் வரை சலுகை வழங்கப்படுகிறது.
இதேபோன்று, கனரா வங்கியில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதத்தில் இருந்து 11.70 சதவீதம் வரை உள்ளது. இந்த வங்கியில் ரூ.5 லட்சம் கடனுக்கான மாதத் தவணை சுமார் ரூ.10,067 முதல் ரூ.11,047 வரை இருக்கும். பொதுவாகக் கடன் தொகையில் 0.25 சதவீதம் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை கடன் பரிசீலனைக் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் வங்கியில் கார் கடனுக்கான தொடக்க வட்டி விகிதம் 7.75 சதவீதமாக உள்ளது. மேலும் பேங்க் பஜார் வெளியிட்ட தகவல்களின் படி ரூ.5 லட்சம் கடனுக்கான மாதத் தவணை சுமார் ரூ.10,031 முதல் ரூ.11,034 வரை இருக்கலாம். மேலும், கடன் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.80 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் ரூ.5 லட்சம் கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்கான மாதத் தவணை சுமார் ரூ.10,090 முதல் ரூ.11,122 வரை இருக்கும். இங்கும் கடன் பரிசீலனைக் கட்டணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரூ.5,000 சரிந்த தங்கம் விலை.. மேலும் விலை குறையுமா?.. தங்கத்தின் நிலை தான் என்ன?
எஸ்பிஐ வங்கியில் கார் லோன் வட்டி எவ்வளவு?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதம் வரை உள்ளது. மேலும் ரூ.5 லட்சம் கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றால், மாதத் தவணை சுமார் ரூ.10,246 முதல் ரூ.10,501 வரை இருக்கும். கடன் பரிசீலனைக் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)