நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
Crater In Moon: 2009ஆம் ஆண்டு முதல் LRO மேற்கொண்ட ஆய்வுகளின்படி, சந்திரனின் மேல்பகுதியில் உள்ள சுமார் 2 சென்டிமீட்டர் மண், விண்கல் தாக்கங்களால் வெளியேற்றப்படும் பொருட்களால் ஒவ்வொரு 80,000 ஆண்டுகளுக்கும் மாற்றம் அடைகிறது. எனவே, அப்பல்லோ விண்வெளி வீரர்களின் காலடித் தடங்களும் நீண்ட காலத்தில் மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பார் 18, 2026: விஞ்ஞானிகள் சந்திரனில் ரோமானிய கொலோசியத்தைவிட பெரிய புதிய பள்ளம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 728 அடி (222 மீட்டர்) விட்டமும், 141 அடி (43 மீட்டர்) ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், சமீப காலத்தில் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய தாக்கப் பள்ளமாகும். சுமார் 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்:
The Moon’s got a big new crater! 🕳️
Spotted by NASA’s Lunar Reconnaissance Orbiter, the McGetchin crater formed when a rock as big as a six-story building crashed into the Moon. It’s 141 feet deep and wider than the length of two football fields.🪨💥🌕https://t.co/I2fX7bPts1 pic.twitter.com/Zft4mKUv1Z
— NASA Solar System (@NASASolarSystem) September 16, 2026
சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி சந்திரனில் மோதியதால் இந்தப் பள்ளம் உருவாகியுள்ளது. 2024 மே மாதத்தில் நாசாவின் Lunar Reconnaissance Orbiter (LRO) விண்கலம் இதன் படங்களைப் பதிவு செய்தது. எனினும், அதிக அளவிலான தரவுகளுக்கு இடையில் இந்தப் பள்ளம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. 2025 ஆகஸ்ட் மாதத்தில்தான் படங்கள் ஆய்வாளர்களின் கவனத்திற்கு வந்தன. பின்னர் விரிவான படங்கள் சேகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது.
முந்தைய சாதனையைவிட 3 மடங்கு பெரியது:
மறைந்த தாமஸ் மெக்கெட்சின் நினைவாக இந்தப் பள்ளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய சாதனைப் பள்ளத்தைவிட இது மூன்று மடங்கு பெரியதாகும். இந்த தாக்கம் சந்திரனின் மேற்பரப்பில் 66 மைல்கள் (100 கி.மீ.)க்கும் அதிகமான பரப்பை சிதறடித்துள்ளது. தூசு மற்றும் பாறை மண் எதிர்பார்த்ததைவிட அதிக கோணத்தில் தூக்கி வீசப்பட்டதாக LRO கேமராக்களின் தலைமை விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நண்பரை நம்பி ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்.. கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பு.. பெற்றோர் பரிதவிப்பு!
சந்திர மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம்:
மற்றொரு ஆய்வில், புதிய பள்ளத்தைச் சுற்றி சுமார் 4 மைல் (7 கி.மீ.) பரப்பளவில் குளிர்ச்சியான பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இது சந்திரனின் மேற்பரப்பு மண் தளர்ந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். விண்கல் தாக்கங்கள் சந்திரனின் ரெகோலித் எனப்படும் மேல்மண்ணை கிளறி, கீழே இருக்கும் பொருட்களை மேலே கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
அப்பல்லோ காலடித் தடங்களும் மறையும்:
2009ஆம் ஆண்டு முதல் LRO மேற்கொண்ட ஆய்வுகளின்படி, சந்திரனின் மேல்பகுதியில் உள்ள சுமார் 2 சென்டிமீட்டர் மண், விண்கல் தாக்கங்களால் வெளியேற்றப்படும் பொருட்களால் ஒவ்வொரு 80,000 ஆண்டுகளுக்கும் மாற்றம் அடைகிறது. எனவே, அப்பல்லோ விண்வெளி வீரர்களின் காலடித் தடங்களும் நீண்ட காலத்தில் மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசா சந்திரனில் விண்வெளி வீரர்களுக்கான தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், புதிய பள்ளத்திலிருந்து வெளியேற்றப்படும் பாறைகள் மற்றும் மண் துகள்கள் எதிர்கால சந்திர தளத்தைத் தாக்கும் அபாயம் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.