பாகிஸ்தான்–சவுதி–துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம்.. ஈரான் கொடுத்த எச்சரிக்கை – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா..
நீண்டகால வரலாற்று உறவுகள், சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்று நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8, 2026: மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு நீடித்த பாதுகாப்பை வழங்காது என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணைய உறுப்பினருமான இப்ராஹிம் ரெசாயி விமர்சித்துள்ளார்.
“ஒப்பந்தத்தால் பாதுகாப்பு கிடைக்காது” – ஈரான்
புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த இப்ராஹிம் ரெசாயி, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்டுள்ள காகித ஒப்பந்தம் மட்டும் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை வழங்காது எனக் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக சவுதி அரேபியா மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான உறவும் அந்நாட்டுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என அவர் விமர்சித்துள்ளார். சவுதி அரேபியா தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால், பாதுகாப்புக்காக பிற நாடுகளிடம் “கெஞ்ச வேண்டிய” அவசியம் இருக்காது என்றும் ரெசாயி தெரிவித்துள்ளார்.
மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்:
இதற்கிடையே, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் “மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்” என்ற பெயரில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பின்போது சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் படிக்க: ராணுவத்தில் சேர்ந்த முதல் அரச குடும்ப பெண்.. டென்மார்ச் இளவரசி எடுத்த அதிரடி முடிவு!
ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்வதற்கான கூட்டு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும், மூன்று நாடுகளுக்கு இடையிலான அனைத்து வகையான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
வரலாற்று உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தம்
நீண்டகால வரலாற்று உறவுகள், சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்று நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காட்ஸில்லா எல் நினோ.. கடுமையான வெயில், வெப்ப அலை.. இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதியின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்
ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளான ஹூதிகள் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களால் சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது ஏற்கெனவே பலமுறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், தனது பாதுகாப்பு கூட்டாண்மைகளை பல்வேறு நாடுகளுடன் விரிவுபடுத்த சவுதி அரேபியா முயற்சி செய்து வருகிறது.
ஒப்பந்தத்தை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா:
இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த முன்னேற்றத்தையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தொடர்ந்து தகவல்களைப் பகிர்வோம்” என தெரிவித்தார்.
இதற்கிடையே, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் முக்கிய எரிசக்தி விநியோகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்நாட்டு கடல்சார் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்கா ஒப்பந்தம், மூன்று நாடுகளின் கூட்டு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.