நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு: நொடிகளில் சரிந்த மலைகள் – வைரலாகும் வீடியோ
Nepal Landslide : நேபாளத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வைரலாகும் வீடியோவில், மலையின் ஒரு பெரும் பகுதி அப்படியே பெயர்ந்து ஆற்றுக்குள் சரிகிறது.
கடந்த 2026, ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவிலிருந்தே இன்னும் மீளாத நேபாளத்தில், மீண்டும் ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 5 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவின் தீவிரத்தைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், வீடுகள் நிறைந்த ஒரு மலைச்சரிவு சில நொடிகளில் மொத்தமாக இடிந்து விழுகிறது. மற்றொரு வீடியோவில், மலையின் ஒரு பெரும் பகுதி அப்படியே பெயர்ந்து ஆற்றுக்குள் சரிகிறது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரின் வேகத்தில், வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து மண்ணுக்குள் புதைவதும் அந்தக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.




இதையும் படிக்க : நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
நேபளத்தின் கண்டகி மற்றும் லும்பினி மாகாணங்களில் உள்ள மனாங், மியாக்டி, பாக்லுங், பர்பத், பால்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பர்பத் மாவட்டத்தின் ஜல்ஜலா கிராமப்புற நகராட்சியில் உள்ள ஃபர்சே பகுதியில், ஒரு குடியிருப்பையே ஆறு முழுவதுமாக அடித்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. காளி கண்டகி, நாராயணி, தினாவ் ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பாய்ந்து கொண்டிருப்பதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
அருவி போல சரிந்து விழும் மலை
🇳🇵 A massive landslide hit Chame in Manang, Nepal, sending an entire mountainside into the Marsyangdi River
The collapse adds to a wider crisis after intense weekend rainfall caused flooding that killed at least 24 people and left 14 missing across several districts.
It comes… pic.twitter.com/x4JOGj2VUP
— Visegrád 24 (@visegrad24) September 28, 2026
சியாங்ஜா மற்றும் குல்மி மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான கான்கிரீட் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கண்டகி மாகாண காவல்துறையின் முதற்கட்டக் கணக்கின்படி, அந்த மாகாணத்தில் மட்டும் 179 வீடுகள் முழுமையாகவும், 28 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. மேலும் 295 வீடுகள் அதிக ஆபத்தான நிலையில் உள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசித்த சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின் கோபுரங்கள் சரிந்ததால், தேசிய மின் தொகுப்பில் 1,013 மெகாவாட் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தலைமை அதிகாரி கிருஷ்ண பிரசாத் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து பெய்யும் மழையும், நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளும் மீட்புப் பணிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
நேபாளத்துக்கு இது ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2வது பெரும் பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2026, ஆகஸ்ட் இறுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.