AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இலங்கையில் என்ன நடக்குது? மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி!

Namal Rajapaksa Arrested: 2013-ம் ஆண்டு ஏர்பஸ் விமானக் கொள்முதலில் அரங்கேறிய 2.3 பில்லியன் டாலர் ஊழல் வழக்கில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்பியுமான நாமல் ராஜபக்சேவைக் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிரடியாகக் கைது செய்துள்ளது. முழு விவரங்கள் உள்ளே.

இலங்கையில் என்ன நடக்குது? மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி!
நாமல் ராஜபக்சே
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Sep 2026 09:17 AM IST

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாட்டின் சீரழிவுக்குக் காரணம் எனக் கூறி ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அக்குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அதிகார இழப்பைச் சந்தித்தனர். இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவைக் அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிரடியாகக் கைது செய்துள்ளது.

இதையும் படிக்க: இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!

விசாரணையும் கைது நடவடிக்கையும்:

இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 40 வயதான நாமல் ராஜபக்சேவுக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. 2013-ம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸிடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது சட்டப்பூர்வமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விரைவில் அவர் நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக்கைது நடவடிக்கையை நாமலின் வழக்கறிஞர் நிஷாந்த தயானந்தாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

2.3 பில்லியன் டாலர் ஒப்பந்தமும் ஊழல் பின்னணியும்:

கடந்த 2005 முதல் 2015 வரை மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில், இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதலுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஏர்பஸ் நிறுவனம் சுமார் 16 மில்லியன் டாலர் தொகையை லஞ்சமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அதில் சுமார் 1.7 மில்லியன் டாலர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கபில சந்திரசேனாவுக்கு கைமாறியதாகவும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளின் கூட்டு விசாரணையில் தெரியவந்தது. மேலும், கபில சந்திரசேனா தனக்குக் கிடைத்த லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை அன்றைய அதிபர் ராஜபக்சவுக்கு வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: “279 உயிர்களை பலிகொண்ட கொடூரம்!” – இலங்கை ஈஸ்டர் சூசைட் பாம் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ல் வெளியீடு!

ராஜபக்ச குடும்பத்தின் மறுப்பும் அடுத்தகட்ட நகர்வுகளும்:

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராஜபக்சே குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தாம் எவ்வித லஞ்சப் பணத்தையும் பெறவில்லை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்சேவிடமும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடன் சுமையில் தவிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் வரை இழப்பைச் சந்தித்துள்ளது. இச்சூழலில், ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய இளைய தலைவரான நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us