மீண்டும் பதற்றம்.. ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை.. ஹோர்முஸில் என்ன நடக்குது?
Trump Warns : ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை கொடுத்துள்ளார்
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தெஹ்ரான் எட்டு ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஈரான் மீண்டும் தாக்கினால், இன்னும் கடுமையாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், “ஈரான் மீதான மிகப்பெரிய தாக்குதல் இன்னும் வரவிருக்கிறது” என்ற டிரம்பின் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. வரவிருக்கும் தாக்குதலில் ஈரானின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
Also Read: “ஈரானுடன் வணிகத் தொடர்பு!”.. இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீது தடை விதித்த அமெரிக்கா!!
ஈரான் சொல்வது என்ன?
மறுபுறம், ஐ.ஆர்.ஜி.சி-யும் அமெரிக்காவிற்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்றும், அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்றும் அது அறிவித்தது. தனது பதில் உடனடியாக இருக்கும் என்பதையும் அது தெளிவுபடுத்தியது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின்படி, ஐ.ஆர்.ஜி.சி தளங்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கின. ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, கெஷ்ம், ஜஸ்க், சிரிக், சபாஹர், பந்தர் அப்பாஸ், கொனாரக் மற்றும் மினாப் ஆகிய பகுதிகளில் பெரும் வெடிப்புகள் நிகழ்ந்தன.
சர்வதேச அளவில் கவலை
இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்கா கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும், ஈரானின் பொருளாதாரம் முழுமையான சரிவின் விளிம்பில் உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஈரான் இந்தக் கூற்றுகளை நிராகரித்து வருகிறது. ஹோர்முஸ் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை அது தெளிவுபடுத்தி வருகிறது. சமீபத்திய நிகழ்வுகளால், உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இங்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் அடுத்த கட்டத்தை எட்டுமா? சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்து வருகின்றன.