திபெத்தில் 40 நிமிட இடைவெளியில் 2 நிலநடுக்கங்கள்: 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Tibet Magnitude 7 Earthquake : திபெத்தில் அக்டோபர் 22, 2026 வியாழக்கிழமை இரவு, 40 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றில் முதலாவது, ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் அக்டோபர் 22, 2026 வியாழக்கிழமை இரவு, 40 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றில் முதலாவது, ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2026 ஆகஸ்ட் மாதம், நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் (Earthquake) 95 பேர் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 நிமிட இடைவெளியில் 2 நிலநடுக்கங்கள்
இந்திய நேரப்படி அக்டோபர் 22, 2026 இரவு 8.03 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் பகுதிக்கு வடக்கு-வடமேற்குத் திசையில் சுமார் 489 கி.மீ. தொலைவில், திபெத்தில் இதன் மையப்பகுதி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 173 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியான தகவல்




இரண்டாவது நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 40 நிமிடங்களில், இரவு 8.42 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் பதிவானது. அருணாச்சலப் பிரதேசத்தின் பசார் பகுதிக்கு வடக்கு அல்லது வடமேற்கே சுமார் 323 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவானது. இது சுமார் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக NCS தரவுகள் தெரிவிக்கின்றன.
முதல் நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அது பூமிக்கு அடியில் 173 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, இவ்வளவு ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களின் அதிர்வுகள், மேற்பரப்பை அடைவதற்குள் ஓரளவு வலுவிழந்துவிடும். இரண்டாவது நிலநடுக்கம் அளவில் சிறியதாக இருந்தாலும், குறைந்த ஆழத்தில் 15 கி.மீ. ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருள்சேதம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டனவா என்பது குறித்தும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிக்க : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி
நிலநடுக்க அபாயப் பகுதி
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத், இந்தியத் தட்டும் யூரேசியத் தட்டும் மோதும் பகுதியில் உள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2026 ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத் மலைப்பகுதியில் பெரும் பனிப்பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையில் இருந்த வீடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளைத் தரைமட்டமாக்கியது. வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளப் பெருக்கில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அதில் இருந்து திபெத் மெல்ல மீண்டும் வரும் நிலையில் தற்போது இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.