இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி
Thoothukudi Beedi Leaves Smuggling: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான 35 கிலோ பீடி இலைகள் கடத்தல் சம்பவத்தை கியூ பிரிவு போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இதில், தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் உட்கோட்டம், திருச்செந்தூர் வட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராமர், கீதன் மற்றும் காவலர்கள் இசக்கி முத்து, பாலமுருகன் இருதய ராஜகுமார், பழனி மற்றும் பேச்சி முத்து ஆகியோர் வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 13- ஆம் தேதி) அதிகாலை சுமார் 2: 40 மணி அளவில் வீரபாண்டியபட்டினத்தில் ஒரு சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது.
40 மூட்டைகளில் 35 கிலோ பீடி இலைகள்
அந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில், கியூ பிரிவு போலீசார் மரித்து சோதனை மேற்கொண்டனர். இதில், ஏராளமான மூட்டைகள் இருந்தது. அதனை போலீசார் சோதனை செய்த போது பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 40 மூட்டைகளில் 35 கிலோ எடைக்கு பீடி இலைகள் இருந்தன. இதனை, போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக, போலீசார் வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, அந்த வாகனத்தில் இருந்த மர்ம நபர்கள் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேலும் படிக்க: சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!




இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
அவர்களை, போலீசார் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக, கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், முதல் கட்ட விசாரணையில் தமிழக பகுதியில் இருந்து பீடி இலைகளை இலங்கைக்கு கப்பல் மூலமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள்.. கியூ பிரிவு போலீஸ் விசாரணை
இந்த பீடி இலைகளின் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும். இதனை கடத்த முயன்ற நபர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 35 கிலோ பீடி இலைகள் மற்றும் அதனை கடத்தி வந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!