பாய்ந்து வந்த சொகுசு கார்.. ஆட்டோ, சரக்கு வாகனம் மீது மோதி விபத்து.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. போலீஸ் விசாரணை!
Dindigul Accident : திண்டுக்கல்லில் விரைவுச் சாலையில் முன்னால் சென்ற ஆட்டோ மற்றும் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதிய சொகுசு காரில் இருந்து ரூ. 5 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கத்தை வேடசந்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர் .
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி நான்கு வழிச்சாலையில் சம்பவத்தன்று இரவு மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை நாராயணன் லால் (25 வயது) என்பவர் ஓட்டி சென்றார். நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற இந்த கார் முன்னால் நாகம்பட்டியை சேர்ந்த முத்துராஜா ( 44 வயது) என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோவை முந்த முயன்றது. ஆனால், எதிர்பாராத விதமாக நாராயணன் லால் ஓட்டி சென்ற கார் ஆட்டோவின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிவேகமாக வந்த அந்த கார் கட்டுப்பாட்டு இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கரூர்- திண்டுக்கல் சாலையில் சென்றது. அப்போது, நாமக்கலில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய 5 பேர் பலத்த காயம்
இதில், ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜா, சரக்கு வாகன ஓட்டுனர் கருப்பசாமி ( 35 வயது), சரக்கு வாகனத்தில் பயணித்த கணபதி ( 35 வயது), பாலமுருகன் ( 34 வயது) மற்றும் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் ஓட்டுனர் நாராயணன் லால் ஆகிய 5 பேரும் பலத்த ரத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். அப்போது, அந்த வழியாக வாகனங்களில் வந்த பிற வாகன ஓட்டிகள் இந்த விபத்தை பார்த்து அதை சிக்கிய நபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வேடசந்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!




சொகுசு காரில் கட்டுக்கட்டாக பணம் மீட்பு
அதன் அடிப்படையில், வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.
ரொக்கம் பறிமுதல் தொடர்பாக போலீசார் விசாரணை
அதனை போலீசார் கைப்பற்றி எண்ணியதில் ரூ. 5 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது. இந்த பணத்துக்கான எந்த ஆதாரமும் காரில் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!