மதுபோதையில் வருவதால் தொல்லை.. தூங்கிய கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைப்பு.. காரைக்காலில் கொதித்தெழுந்த மனைவி!
Puducherry Crime : புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் மதுபோதையில் வந்து தகராறு செய்த கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆத்திரத்தில் இருந்து வந்த மனைவி டீசலை ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக திருநள்ளார் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே உள்ள சுரக்குடி பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் ( 46 வயது). கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், செல்வத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டிட தொழிலாளி செல்வம் வழக்கம் போல மது அருந்தி விட்டு அதிக அளவிலான மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த தனது மனைவியிடம் தனது செல்போன் சார்ஜரை எங்கே என்று கேட்டு வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், தம்பதியிடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகறாராக மாறியது.
தூங்கிய கணவன் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவி
பின்னர், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, செல்வம் தனது அறைக்கு துங்க சென்றார். இதில், அவரது மனைவி ஜோதி கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதனால், ஆத்திரம் அடங்காத அவர் வீட்டில் இருந்த டீசல் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வம் மீது டீசலை ஊற்றி தீ வைத்தார். இதில், வலியும், வெப்பமும் தாங்காமல் செல்வம் தூக்கத்தில் இருந்து அலறி துடித்து எழுந்தார். அவரது சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொது மக்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.
மேலும் படிக்க: ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!




காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அப்போது, உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் செல்வம் அலறி துடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, அவர் மீது பற்றிய தீயை அனைத்து அவசர ஆம்புலன்ஸ் மூலமாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மனைவி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
இதைத் தொடர்ந்து, செல்வம் மனைவி ஜோதி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தினமும் மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்த கணவரின் தொல்லை தாங்காமல் டீசல் ஊற்றி மனைவி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!