மனித உடலில் 3.1 கிலோ கல்.. உலகையே வியப்பில் ஆழ்த்திய இலங்கை மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!!
Historic Surgery in Sri Lanka: இலங்கையின் திருகோணமலை பொது மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 55 வயது நோயாளியின் வயிற்றிலிருந்து 3.1 கிலோ எடையும் 19 செ.மீ நீளமும் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுநீரக நிபுணர் மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் குழுவினர் இந்த அரிய மருத்துவச் சாதனையைச் செய்து முடித்துள்ளனர்.
இலங்கை, ஆகஸ்ட் 20: இலங்கை மருத்துவத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அபூர்வமான நிகழ்வு ஒன்று கிழக்கு மாகாணத்தில் அரங்கேறியுள்ளது. மனித உடலில் இத்தனை பெரிய அளவிலான கல்லா என்ற வியப்பில் உலக மருத்துவ உலகையே உற்றுநோக்க வைக்கும் வகையில், திருகோணமலை பொது மருத்துவமனையில் 3.1 கிலோ எடையும், 19 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட இராட்சதச் சிறுநீரகக் கல் வெற்றிகரமாகச் சத்திர சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பழைய வீட்டை சீரமைக்கும்போது கிடைத்த புதையல்.. ரூ.98 கோடி மதிப்பு.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!
பக்கவாதப் பாதிப்பால் உடல் முடக்கம்:
பக்கவாதப் பாதிப்பு காரணமாக அன்றாட உடல் இயக்கங்கள் முடங்கிய நிலையில், சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் 55 வயது முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பக்கவாதத்திற்கான பரிசோதனைகளை மருத்துவர்கள் முடுக்கிவிட்ட போது, எதிர்பாராதவிதமாக அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு பெரிய வீக்கம் தென்பட்டது. வெளிப்புறக் கண்ணோட்டத்திலேயே நன்கு புலப்பட்ட அந்த வீக்கத்தைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள், உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உத்தரவிட்டனர். அதன் முடிவில்தான், அவரது சிறுநீரகப் பையை ஆக்கிரமித்தபடி பெரும் கல் ஒன்று உருவெடுத்திருப்பது தெரியவந்தது.
உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து:
இதனைத் தொடர்ந்து, இந்தச் சிக்கலான வழக்கைச் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். எனினும், சத்திர சிகிச்சையை உடனடியாகத் தொடங்குவதில் மருத்துவக் குழுவுக்குப் பல சவால்கள் வந்தன. பக்கவாதக் கோளாறால் ரத்த ஓட்டம் சீர்குலைந்திருந்ததுடன், அடைபட்ட சிறுநீரால் சிறுநீரகப் பையின் அழுத்தம் அதிகரித்து உறுப்புகளின் இயக்கம் செயலிழக்கும் ஆபத்து நிலவியது. இதனால், முதலில் சிறுநீரகப் பையின் அழுத்தத்தைக் குறைத்து, நோயாளியின் உடல்நிலையை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்தும் பணிகளை மருத்துவர்கள் கவனமாக மேற்கொண்டனர்.
வெற்றிகரமாக சிறுநீரக கல் அகற்றம்:
கடந்த 1998-ஆம் ஆண்டிலேயே இதே நோயாளிக்குச் சிறிய அளவில் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், வயிற்றுப் பகுதியில் பழைய வடுவும் தழும்புகளும் இருந்தன. இதர நவீன சிகிச்சை முறைகளை விடப் பழமையான தழும்பு திசுக்களைக் கடந்து அறுவை சிகிச்சை செய்வதே ஒரே தீர்வாக அமைந்தது. நோயாளியின் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் நிலைபெற்றதை உறுதி செய்த மருத்துவர்கள், சுமார் ஒரு மணி நேரக் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பிரம்மாண்ட கல்லை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான்–சவுதி–துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம்.. ஈரான் கொடுத்த எச்சரிக்கை – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
அலட்சியமே பாதிப்புக்கு முக்கிய காரணம்:
நாற்பது வயதைக் கடக்கும் ஆண்களுக்குச் சிறுநீர் பாதையில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை அலட்சியப்படுத்துவதே இதுபோன்ற பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி தோன்றும் உணர்வு போன்ற ஆரம்பகால அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விடும்போது, தங்கும் சிறுநீரானது படிமங்களாக மாறி காலப்போக்கில் பிரம்மாண்ட கற்களாக உருவெடுக்கிறது. எனவே, உடலின் சிறு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது என மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.