AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய மக்களுக்கு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சுதந்திர தின வாழ்த்து! விண்வெளியில் பறந்த மூவர்ணக்கொடி..

இந்தியா-ரஷ்யா விண்வெளி ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் ரோஸ்கோஸ்மோஸ், இந்தியாவில் உள்ள அதன் பிரதிநிதி அலுவலகம் மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்திய போட்டி குறித்தும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் குறிப்பிட்டனர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற படைப்புகளும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியுடன் விண்வெளியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்திய மக்களுக்கு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சுதந்திர தின வாழ்த்து! விண்வெளியில் பறந்த மூவர்ணக்கொடி..
இந்திய மக்களுக்கு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சுதந்திர தின வாழ்த்து!
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Aug 2026 17:14 PM IST

ஆகஸ்ட் 12, 2026: இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து இந்திய மக்களுக்கு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்திய மூவர்ணக் கொடியை கைகளில் ஏந்தியபடி அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி, இந்தியா-ரஷ்யா இடையேயான பல ஆண்டுகால நட்புறவையும், விண்வெளித் துறையில் இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

விண்வெளியில் இருந்து சுதந்திர தின வாழ்த்து:


வீடியோ செய்தியில் ரஷ்ய விண்வெளி வீரர் பியோடர் டுப்ரோவ், இந்திய மக்களுக்கு 80-வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தியாவில் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சி தொடர்ந்து நிலவ வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ரஷ்யா உறவில் விண்வெளி ஆராய்ச்சி முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மனித விண்வெளிப் பயண வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என ரஷ்ய விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர். விண்வெளிக்கு சென்ற முதல் மனிதரான சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் வரலாறு படைத்து 65 ஆண்டுகள் நிறைவடைவதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

இந்தியாவுக்கு வந்த யூரி ககாரின்:

யூரி ககாரின் 1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது இந்தியா மற்றும் சோவியத் யூனியன் இடையேயான நட்பு வலுப்பெற்று வந்த நிலையில், அவரது பயணம் இரு நாடுகளின் உறவுக்கு முக்கிய அடையாளமாக அமைந்தது.

இந்தியா அழகான நாடு என்றும், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது அது இன்னும் அழகாகத் தெரியும் என்றும், ஆனால் பூமியில் இந்தியா இன்னும் அழகான நாடாக இருப்பதாகவும் ககாரின் கூறியதை ரஷ்ய விண்வெளி வீரர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தியாவில் தனக்கு உண்மையான நண்பர்கள் இருப்பதாக அவர் கூறியதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

1975-ல் தொடங்கிய விண்வெளி ஒத்துழைப்பு

இந்தியா-ரஷ்யா இடையேயான விண்வெளி ஒத்துழைப்புக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1975-ம் ஆண்டு சோவியத் யூனியன், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஆர்யபட்டா’வை விண்ணில் செலுத்தியது. இது இரு நாடுகளின் விண்வெளி கூட்டுறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக, 1984-ம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா, சோவியத் நாட்டின் சோயுஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ககன்யான் மூலம் புதிய கட்டம்

தற்போது இந்தியா மேற்கொண்டு வரும் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் மூலம் இரு நாடுகளின் விண்வெளி ஒத்துழைப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய விண்வெளி வீராங்கனை அன்னா கிகினா தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்காக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஒத்துழைப்பை இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்தியா-ரஷ்யா நட்பு என்றும் நிலைத்திருக்கட்டும்”

இந்தியா-ரஷ்யா விண்வெளி ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் ரோஸ்கோஸ்மோஸ், இந்தியாவில் உள்ள அதன் பிரதிநிதி அலுவலகம் மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்திய போட்டி குறித்தும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் குறிப்பிட்டனர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற படைப்புகளும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியுடன் விண்வெளியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இறுதியாக, இந்திய மக்களுக்கு அமைதி, செழிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என ரஷ்ய விண்வெளி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய மூவர்ணக் கொடியை கைகளில் ஏந்தியபடி விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெத்யாயெவ், “இந்தியா-ரஷ்யா நட்பு என்றும் நிலைத்திருக்கட்டும்” எனக் கூறி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியான இந்த சிறப்பு வாழ்த்துச் செய்தி, இந்தியா-ரஷ்யா இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் நட்புறவுக்கும், குறிப்பாக விண்வெளித் துறையில் இரு நாடுகளின் வலுவான கூட்டாண்மைக்கும் அடையாளமாக அமைந்துள்ளது

Follow Us