இந்தியா ரஷ்யாவை இணைக்கும் புதிய ரயில் பாதை.. வர்த்தகத்திற்கு புதிய வழித்தடம் குறித்து ஆலோசனை..
உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் நிலவும் பதற்றமும் இந்தத் திட்டத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கருங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் போஸ்பரஸ் நீரிணையும், பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்கள் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையும் சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆகஸ்ட் 10, 2026: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு தரைவழியாக ரயில் பாதை அமைத்து, இந்தியப் பெருங்கடலை நேரடியாக அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. முக்கிய கடல்வழிப் பாதைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடல் போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் மாற்று வர்த்தகப் பாதைகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.
இந்தியாவுக்கு தரைவழியாக ரயில் பாதை – ரஷ்யா ஆராய்ச்சி:
ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின், ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான TASS-க்கு அளித்த பேட்டியில், இந்தியப் பெருங்கடலை இணைக்கும் ரயில் வழித்தடத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போஸ்பரஸ் நீரிணை மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகிய முக்கிய கடல்வழிகளில் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அபாயங்களைக் கருத்தில் கொண்டு மாற்று வழித்தடங்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பாகிஸ்தான்–சவுதி–துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம்.. ஈரான் கொடுத்த எச்சரிக்கை – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா..
ரஷ்யாவின் பரிந்துரைப்படி, புதிய ரயில் வழித்தடம் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை சென்றடையும் வகையில் அமைக்கப்படலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரஷ்யாவையும் தெற்காசிய நாடுகளையும் இணைக்கும் முக்கிய தரைவழிப் போக்குவரத்து பாதையாக இது உருவாகும். மேலும், இந்தியப் பெருங்கடலை ரயில் வழியாக அணுகுவதற்கான புதிய வாய்ப்பையும் ரஷ்யாவுக்கு வழங்கும்.
தரைவழிப் போக்குவரத்து முக்கியத்துவம் பெறும் என நம்பிக்கை:
உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் நிலவும் பதற்றமும் இந்தத் திட்டத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கருங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் போஸ்பரஸ் நீரிணையும், பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்கள் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையும் சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் படிக்க: மீண்டும் பதற்றமா? டிரம்பின் காசா திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்.. அடுத்து என்ன?
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றம் காரணமாக கடல்வழி சரக்கு போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. கப்பல் போக்குவரத்தில் தடைகள், ராணுவ மோதல்கள், முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், மாற்று தரைவழிப் போக்குவரத்து முக்கியத்துவம் பெறும் என ரஷ்யா கருதுகிறது.
பெரிய முதலீடுகள் தேவைப்படும்:
எனினும், இந்த ரயில் வழித்தடத்தை உருவாக்குவது பல்வேறு சவால்களை கொண்டுள்ளது. இந்தப் பாதையில் இடம்பெறும் ஒவ்வொரு நாட்டுடனும் போக்குவரத்து, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், புதிய ரயில் பாதைகள் மற்றும் எல்லை தாண்டிய இணைப்புகளை உருவாக்குவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படும்.
தற்போது இந்தத் திட்டம் பரிசீலனை மற்றும் முன்மொழிவு நிலையிலேயே உள்ளது. இருப்பினும், இது நடைமுறைக்கு வந்தால், ரஷ்யா–இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்துக்கு மாற்றாக முக்கியமான தரைவழி வர்த்தகப் பாதையாகவும் உருவெடுக்கக்கூடும்.