2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை
மின்சார வாகனத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பாரம்பரிய எரிபொருள் வாகனத் துறை பணியாளர்களைவிட 45 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கக்கூடும் என Adecco India தெரிவித்துள்ளது. பேட்டரி, மின்சக்தி மின்னணுவியல், மென்பொருள், சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களில் திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் 10, 2026: இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தத் துறை வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி, அவற்றை தயாரித்தல், சார்ஜிங் மையங்களை நிர்வகித்தல், பராமரித்தல், மென்பொருள் சேவைகள் மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனத்தால் 4 கோடி வேலைவாய்ப்புகள்:
Adecco India நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவின் மின்சார வாகனத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் 3 கோடி முதல் 4 கோடி வரையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இதில் வியக்கத்தக்க வகையில், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பாரம்பரிய வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி உற்பத்தி, மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு, வாகனப் படை (Fleet) நிர்வாகம், மென்பொருள், வாகனப் பராமரிப்பு மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட துறைகள் எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சிறப்பு திறன்கள் கொண்ட பணியாளர்களுக்கான தேவை சுமார் 35 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது.
மேலும் படிக்க: கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!
55 சதவீத வேலைவாய்ப்பு உற்பத்தித் துறையில் உருவாகும்:
மொத்தம் உருவாகும் வேலைவாய்ப்புகளில் வெறும் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே நேரடி வேலைவாய்ப்புகளாக இருக்கும். மீதமுள்ள 85 முதல் 90 சதவீதம் மறைமுக வேலைவாய்ப்புகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி பராமரிப்பு, வாகனப் படை நிர்வாகம், மென்பொருள், வாகன சேவை, ஓட்டுநர் பயிற்சி, தளவாடம் மற்றும் பேட்டரி மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளுக்கான தேவை அதிகரிக்கும்.
மொத்த வேலைவாய்ப்புகளில் 50 முதல் 55 சதவீதம் உற்பத்தித் துறையில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பேட்டரி உற்பத்தி, மின்சார வாகன உள்கட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி பொருளாதாரம் ஆகியவை வேகமாக வளரக்கூடிய துறைகளாக உள்ளன.
இந்த ஆண்டு 12.6 லட்சம் மின்சார வாகனங்கள் தயாரிப்பு:
இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாடும் வேகமாக அதிகரித்து வருகிறது. அரசின் PM E-DRIVE தரவின்படி, 2025-26ஆம் நிதியாண்டில் ஜூலை 2026 வரை 12.6 லட்சத்துக்கும் அதிகமான மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி
மின்சார வாகனத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பாரம்பரிய எரிபொருள் வாகனத் துறை பணியாளர்களைவிட 45 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கக்கூடும் என Adecco India தெரிவித்துள்ளது. பேட்டரி, மின்சக்தி மின்னணுவியல், மென்பொருள், சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களில் திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
மேலும், புதிய வேலைவாய்ப்புகளில் 40 முதல் 50 சதவீதம் ஆரம்பகட்டத்தில் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியிடங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இவை நிரந்தரப் பணிகளாக மாற வாய்ப்புள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பசுமை வேலைவாய்ப்புகளில் சுமார் 60 சதவீதம் மின்சார வாகனச் சூழலுடன் தொடர்புடையதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.