அசாதாரண துணிச்சல் காட்டிய வீர விமானி: கேப்டன் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..
PM Modi Speaks to Captain Smit Machchaar: அவசரநிலையின் போது விமானி வெளிப்படுத்திய மன உறுதியையும் துணிச்சலையும் பிரதமர், கேப்டன் ஸ்மித்தை நேரடியாக தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். நாடு முழுவதும் அவரது துணிச்சலைக் கண்டு பெருமைப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், கேப்டன் ஸ்மித் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
அக்டோபர் 2, 2026: ஆபத்தான சூழ்நிலையிலும் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்திய இந்தியாவின் வீர விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசினார். சம்பவத்தின் விவரங்களையும், அந்த முக்கியமான தருணங்களில் தனக்கு தைரியத்தை அளித்த காரணிகளையும் கேப்டன் ஸ்மித் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார்.
கேப்டனின் துணிச்சலை பாராட்டிய பிரதமர்:
அவசரநிலையின் போது விமானி வெளிப்படுத்திய மன உறுதியையும் துணிச்சலையும் பிரதமர், கேப்டன் ஸ்மித்தை நேரடியாக தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். நாடு முழுவதும் அவரது துணிச்சலைக் கண்டு பெருமைப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், கேப்டன் ஸ்மித் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
கேப்டனின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு:
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பெரும் விபத்தைத் தவிர்க்க உதவிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார். ஆபத்தான சூழ்நிலையிலும் அவர் வெளிப்படுத்திய மன உறுதியையும் சமயோசிதமான செயல்பாட்டையும் பிரதமர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைதுபாயின் FZ1073 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தின் காக்பிட்டில் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்த சக விமானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது சக விமானி ஸ்மித் மச்சாரை தாக்கியதாகவும், இதில் அவர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னரும் அவர் விமானத்தின் கட்டுப்பாட்டை கைவிடாமல் செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரநிலையை உணர்ந்த கேப்டன் ஸ்மித், விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து குறித்து அவசர எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், காக்பிட் கதவைத் திறந்ததன் மூலம் விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.